வெவ்வேறு நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் அடங்கியுள்ள குறைந்த வருமானக் குடும்பங்களை ஆதரிப்பதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள நாடுகடந்த குடும்பப் பராமரிப்பு நிலையத்தை டெல்டா அவென்யூவில் திங்கட்கிழமை (ஜூலை 15) திறந்துவைத்த குமாரி இந்திராணி, இத்தகைய குடும்பங்கள் மாறுபட்ட சவால்களை எதிர்நோக்குவதாகத் தம் உரையில் குறிப்பிட்டார்.
வெவ்வேறு நாட்டுக் குடியுரிமை பெற்று சிக்கலான நிலையில் உள்ள இத்தகைய குறைந்த வருமானக் குடும்பத்தினருக்கு கல்வி, மருத்துவச் செலவுகள் கட்டுப்படியாகக்கூடிய நிலையில் இல்லை.
அத்துடன் மணவிலக்கு, ஜீவனாம்சம் தத்தெடுப்பு போன்ற விவகாரங்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், பல நேரங்களில் சட்ட ரீதியான உதவிக்குத் தகுதி பெறாததால் இந்த ஒருங்கிணைந்த நிலையம் அவர்களது தேவைகளை நிறைவுசெய்ய முற்படுகிறது. சிங்கப்பூர் குடியுரிமையையும் நிரந்தரவாசத்தையும் அவர்கள் பெறுவதற்கு இந்நிலையம் கைகொடுக்கிறது.
இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தோர் பலமுறை நட்டாற்றில் விடப்படுவதாகக் குறிப்பிட்ட குமாரி இந்திராணி, உண்மையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் திட்டங்கள் தேவைப்படுவதாகக் கூறினார்.
“இந்நிலையம் நிறுவப்படுவதன் மூலம் இத்தகையோருக்கு நாம் சட்டரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆதரவு வழங்குவதுடன், சிங்கப்பூரில் எந்தப் பின்புலத்தைச் சேர்ந்தவராயினும் எல்லாக் குடும்பங்களுக்கும் ஆதரவு தரப்படுகிறது என்ற நம் நிலைப்பாட்டை எல்லோருக்கும் தெளிவுபடுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
“நாடுகடந்த குடும்பப் பராமரிப்பு நிலையம் போன்ற திட்டங்கள், பொதுத்துறை-தனியார் துறை உறவுகளுக்குத் தரப்படும் ஆதரவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
“அனைவரையும் அரவணைக்கும் பரிவுமிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் இத்தகைய திட்டங்களை ஆதரிப்பதில் அரசாங்கம் பெருமை கொள்கிறது,” என்று குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
டயானா கோ நிதியத்தின் ஆதரவில், ஆசிய சமூக அறக்கட்டளை வாயிலாக ‘புரோ போனோ எஸ்ஜி’, தெற்கு மத்திய சமூக குடும்பச் சேவை நிலையத்தில் முழுநேர சமூக வழக்கறிஞர்களைப் பணியமர்த்தும்.
‘டிஐஎவ்’ எனப்படும் ஒருங்கிணைக்கும் திட்டத்தின்படி, உதவி நாடும் குடும்பங்களுக்குச் சுகாதார, கல்வி, குடியிருப்பு தொடர்பான நிதியுதவிக்கு விண்ணப்பிக்க சமூக ஊழியர்களும் குடும்ப வழிகாட்டிகளும் உதவி செய்வர்.
நாடுகடந்த குடும்பப் பராமரிப்பில் ஏற்படும் இடைவெளிகளைத் தீர்க்க முக்கியப் படியாக இந்த நிலையம் திகழ்வதாக ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பின் துணை இயக்குநர் பிரேம்நாத் விஜயகுமார் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“சமூக, சட்ட ஆதரவை ஒருங்கிணைப்பதால் இத்தகைய குடும்பங்களின் பலதரப்பட்ட தேவைகளை எங்களால் மேலும் சுமுகமாக நிறைவுசெய்ய முடிகிறது,” என்றார் அவர்.