கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஏற்கெனவே கண்காணிப்பில் இருந்தார்

கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஏற்கெனவே கண்காணிப்பில் இருந்தார்

2 mins read
be783fea-a02c-4261-8bc7-1a997c4327bc
அன்னத்யா அன்னஹரி 2021 மே மாதம் ஏற்கெனவே அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். - கற்பனைப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இம்மாதத் தொடக்கத்தில் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 33 வயது முன்னாள் பொதுச் சேவை ஊழியர் ஏற்கெனவே அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஓர் ஆணைபெற்ற கழகத்தின் முன்னாள் மேலாளரான அன்னத்யா அன்னஹரி எனப்படும் அவர், சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல்களைத் தூண்டக்கூடிய இணையப் பதிவுகளை வெளியிட்டதற்காக அவர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

குறிப்பாக, கடந்த 2021 மே மாதம் பாதுகாப்புத் துறையின் கவனத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) திங்கட்கிழமை (ஜூலை 15) தெரிவித்தது.

அப்போது, தீவிரவாதப் போக்கு சார்ந்த செய்கைகள் அவரிடம் இல்லை. அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இணையப் பதிவுகளை அவர் நீக்கினார்.

இருப்பினும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அன்னத்யா மீண்டும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தார். இஸ்ரேலியர்களைத் தாக்கிக் கொல்வதற்கான அச்சுறுத்தல் அடங்கிய அவரது இணைய நடவடிக்கைகளுக்காக அந்தப் பெண் கண்காணிக்கப்பட்டு வந்ததாக ஐஎஸ்டி கூறியது.

சமூக ஊடக நடவடிக்கைகளில் கவனமாக இருக்குமாறு 2021ஆம் ஆண்டு எச்சரிக்கப்பட்ட பின்னரும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை என்றும் அது தெரிவித்தது.

“மாறாக, தீவிரவாதச் சித்தாந்ததைப் பரப்பும் நோக்கம் கொண்ட அவரது இணைய நடவடிக்கைகள் அதிகரித்தன,” என்றது ஐஎஸ்டி.

ஒரு கட்டத்தில், ‘ஆக்‌ஸிஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ (ஏஓஆர்) அமைப்பிற்கு உதவி செய்யும் சமூக ஊடகத் தளம் ஒன்றின் நிர்வாகி ஆனார் அன்னத்யா.

ஹமாஸ், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள், ஹிஸ்புல்லா, ஹூதிகள் முதலிய இஸ்லாமியப் போராளிகளையும் பயங்கரவாத அமைப்புகளையும் உள்ளடக்கிய கட்டமைப்புதான் ‘ஆக்‌ஸிஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது ஆணைபெற்ற கழகம் ஒன்றில் அந்தப் பெண் மேலாளராக வேலை செய்தார் என்று குறிப்பிட்ட ஐஎஸ்டி, அதன் பெயரை அது வெளியிடவில்லை. இருப்பினும், தற்போது அந்தப் பெண் அங்கு வேலை செய்யவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்