சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதாகவும் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது தங்களது கடமை என்று பலர் கருதுவதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.
குடும்ப ஆதரவே பலருக்கும் முதற்கட்டமானது என்றும் ஆய்வில் தெரிய வந்தது.
ஆய்வில் பங்கேற்ற 15 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தங்களது பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டியது தங்களது கடமை என்று தெரிவித்தனர்.
அதேநேரம், பராமரிப்பு உதவிக்காக தங்களது குடும்பத்தைச் சார்ந்து உள்ளதாக மூத்தோர் பலர் தெரிவித்துள்ளனர்.
குடும்பங்களின் நிலவரத்தை அறிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய அறிக்கை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் திங்கட்கிழமை (ஜூலை 15) நடைபெற்ற தேசிய குடும்ப விழாவில் வெளியிடப்பட்டது.
இங்குள்ள குடும்பங்கள் எந்த அளவுக்கு மீள்திறன் கொண்டுள்ளன என்பதை அறிய அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் அப்படி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதல்முறை.
சவால்களை எதிர்கொண்டு, சிரமங்களில் இருந்து மீண்டு வரவும் மனஉளைச்சல் தரும் சம்பவங்களைச் சமாளிக்கவும் குடும்பங்களுக்கு உள்ள திறன்களை அறிவதற்காக அந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏறத்தாழ 2,000 சிங்கப்பூரர்கள் அதில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
2023 இறுதிக் காலாண்டு தொடங்கி 2024 முதல் காலாண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தனிப்பட்ட முறையில் அல்லாமல் குடும்பமாக சவால்களைச் சந்தித்த அனுபவம் உண்டா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
சிரமங்கள் ஏற்படும்போது உதவிக்கு குடும்பத்தை எதிர்பார்ப்பது உண்டா என்றும் வினவப்பட்டது.
மனஉளைச்சல் தரக்கூடிய சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற தீர்வுகளின் மீது கவனம் செலுத்த முடிகிறதாக என்றம், கடினமான சூழ்நிலைகளைக் கடந்துவர பொருளியல் நிலவரம் போதுமானதாக உள்ளதா என்றும் ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டது.
‘வால்ஷ் ஃபேமிலி ரிசிலியன்ஸ் கொஸனர்ஸ்’ என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரிய அளவிலான ஆய்வை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நடத்தி இருப்பது இதுவே முதல்முறை.

