தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023ஆம் ஆண்டில் திருமணங்கள் குறைந்தன

2 mins read
eca18b23-f8f1-449e-a458-c5da4cb0cf63
கடந்த ஆண்டு பதிவான திருமணங்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 3.7 விழுக்காடு குறைவு.  - கோப்புப் படம்: சாவ்பாவ்

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய திருமண மோகம் தணிந்ததன் காரணமாக 2023ஆம் ஆண்டு குறைவானவர்களே மணம் புரிந்துகொண்டனர்.

மொத்தமாக 28,310 பேர் கடந்த ஆண்டு திருமணத்தைப் பதிவு செய்தனர். 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 3.7 விழுக்காடு குறைவு. அந்த ஆண்டில் சாதனை அளவாக 29,389 திருமணங்கள் நடந்தேறின.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு திங்கட்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட குடும்ப நிலவர அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துடனும் தொடர்புடைய புள்ளிவிவரங்களை உள்ளடக்கியதாக அந்த 37 பக்க அறிக்கை உள்ளது.

மணம் புரிதல், குடும்பத்தை உருவாக்குதல், ஆரம்பகாலக் குழந்தைப் பருவம் மற்றும் முதுமை போன்ற வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்கள் தொடர்புடைய விவரங்கள் அவை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து உள்ளார்.

ஜூன் மாதம் 23ஆம் தேதி வரை நீடித்த ஒருமாத கால தேசிய குடும்ப விழாவில் ஈடுபட்ட பங்காளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று அவர் பேசினார்.

இதுபோன்ற புள்ளிவிவரங்கள் புள்ளிவிவரத் துறை வெளியிட்டு வரும் மக்கள்தொகை நிலவர அறிக்கையுடன் இணைத்து இதுவரை வெளியிடப்பட்டு வந்தது.

ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றதொரு சிறந்த இடமாக சிங்கப்பூர் தொடர்ந்து விளங்கி வருவதாக திரு மசகோஸ் கூறினார்.

“2023ஆம் ஆண்டு ஏறத்தாழ 28,000 திருமணங்கள் பதிவாயின. பத்தாண்டுகளுக்கு முன்னர் பதிவான திருமணங்களைக் காட்டிலும் இது 2,000க்கும் மேல் அதிகம். ஒட்டுமொத்தமாக, ஐந்தாண்டு கால சராசரி திருமணங்களின் எண்ணிக்கை நிலையாக உள்ளது,” என்றார் அவர்.

திருமணப் பதிவாளரான ஜோவன்னா போர்டில்லா என்னும் பெண்மணி கூறுகையில், “கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் திருமணங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு அதுபோன்ற கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்னர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக திருமணங்களைத் தள்ளிப்போட்ட பலரும் 2022ஆம் ஆண்டு மணம் முடித்தனர்.

“சாதனை அளவாக அப்போது பதிவான திருமணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தது என்பது எதிர்பாராத ஒன்றல்ல,” என்றார்.

குழந்தை பெறுவது குறைந்தது

இதற்கிடையே, சிங்கப்பூர்வாசிகளின் ஒட்டுமொத்த குழந்தை பிறப்புக் குறியீடு கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு 0.97 எனக் குறைந்ததாக அறிக்கை கூறியது.

பெண்கள் தங்களது இனப்பெருக்க ஆண்டுகளில் ஈன்றெடுக்கக்கூடிய குழந்தையின் சராசரி எண்ணிக்கையைக் குறிப்பது இந்தக் குறியீடு.

குழந்தை பெற்றுக்கொள்ளாத அல்லது ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்ளும் பெண்களின் விகிதம் அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டியது.

புதிய தம்பதியரிடம் நிலைத்தன்மை

அண்மைய ஆண்டுகளில் மணம் புரிந்தோர், அதற்கு முந்திய ஆண்டுகளில் மணம் புரிந்தோரைக் காட்டிலும் குறைவான அளவே மணவிலக்கு பெற்றதாக அறிக்கை கூறியது.

ஆக அண்மைய காலங்களில் திருமணம் செய்துகொண்டோரின் திருமணம் அதிக நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதை அது குறிக்கிறது.

குறிப்புச் சொற்கள்