சிங்கப்பூர் தடகள விளையாட்டாளர்களின் வளர்ச்சிக்கு $500,000 நிதியாதரவு

சிங்கப்பூர் தடகள விளையாட்டாளர்களின் வளர்ச்சிக்கு $500,000 நிதியாதரவு

இன்கம் இன்சூரன்ஸ்

16 Jul 2024 - 12:06 am

2 mins read

இன்கம் இன்சூரன்ஸ் நிறுவனம், சிங்கப்பூர் தடகள விளையாட்டுகள் சங்கத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில், ஆண்டுக்கு $100,000 என மொத்தம் $500,000 நிதியாதரவு வழங்கவுள்ளதாக ஜூலை 11ஆம் தேதி அறிவித்துள்ளது. 

இந்த ‘தி இன்கம் இன்ஷுரன்ஸ் அத்லெட்டிக்ஸ் டிவெலப்மண்ட் ஃபண்ட்’ , 2029ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டாளர்களுக்கு உதவும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனம் தேசிய தடகள விளையாட்டுகள் சங்கத்துடன் கொண்டுள்ள பங்காளித்துவத்தை இந்த நிதி மேலும் வலுவாக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிதி விளையாட்டாளர்கள், உதவிப் பணியாளர்களுக்கான காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கும். 

இந்தப் புதிய ஆதரவு நிதி இதன் தொடர்ச்சியாக அமைகிறது.

இந்நிதி இளம் விளையாட்டாளர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரிதும் உதவும் என இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

“அனைத்துலக அளவில் நமது சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் வளர்ந்து, தொடர்ந்து போட்டியிடுவதை உறுதிசெய்ய சிங்கப்பூர் தடகள விளையாட்டுகள் சங்கத்துடன் இணைந்து சேவையாற்றுவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்று இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனத் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி தீரன் அமீன் கூறினார்.  

இந்த நிதி தங்களுக்கு நிதியாதரவாக அமைவது மட்டுமின்றி தங்களது திறன்களின் மீது வைக்கப்படும் நம்பிக்கையைக் காட்டுவதாகவும் தங்களைத் தொடர்ந்து முயற்சிக்க ஊக்குவிப்பதாகவும் சிங்கப்பூரின் தலைசிறந்த 400 மீட்டர் ஓட்ட வீராங்கனையான லாவன்யா ஜெயகாந்த் கூறினார்.

“இந்த ஆதரவு எங்களுக்கு அளிக்கவிருக்கும் வாய்ப்புகளுக்காகவும் அதன் வழி சிங்கப்பூருக்குப் பெருமை சேர்ப்பதற்காகவும் நாங்கள் துடிப்புடன் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விளையாட்டுஆதரவு