சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் இந்தியாவில் அடுத்த மூன்றாண்டுகளில் US$10 பில்லியன் (S$13.4 பில்லியன்) முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
நிதிச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் போன்ற துறைகளில் அந்த முதலீடு இருக்கும் என்று உயர்மட்ட நிர்வாகி ஒருவர் கூறினார்.
சீனாவிடம் எச்சரிக்கைப் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கும் தெமாசெக்கின் பார்வை இந்தியா பக்கம் திரும்பி இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியப் பொருளியல் விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது.
அதன் பங்குச் சந்தை வரலாற்று உச்சத்தைத் தொட்டு வருகிறது. பங்குச் சந்தையில் ஐபிஓ மூலம் அறிமுகம் ஆகும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
தெமாசெக்கின் உலக முதலீட்டில் இந்தியாவின் பங்கு 7 விழுக்காடு.
அதனை அதிகரிக்க தெமாசெக் எண்ணுவதாக தெமாசெக் இந்திய முதலீட்டுப் பிரிவின் நிர்வாக இயக்குநர் மோஹித் பண்டாரி தெரிவித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தெமாசெக் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் நேர்காணல் அளித்த அவர், நீண்டகாலமாக நாங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்து வருகிறோம்,” என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “தற்போதைய பொருளியல் நிலவரத்தையும் புவிசார் அரசியல் பதற்றத்தையும் நாங்கள் அறிவோம்.
“அதற்கேற்ற வகையில் எங்களது முதலீட்டுப் பட்டியலை சரிசெய்வோம்,” என்றார்.
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தமது நிறுவனம் செய்துள்ள முதலீடுகளில் இருந்து கிடைக்கும் லாபம் சீனாவில் குறைந்த செயல்திறனால் ஏற்பட்ட தாக்கத்தைச் சமாளிக்க உதவி இருப்பதாக தெமாசெக் கடந்த வாரம் தெரிவித்தது.
வர்த்தகப் பதற்றங்களுக்கு இடையில் சீனாவிடம் எச்சரிக்கையான அணுகுமுறையைத் தான் கடைப்பிடிப்பதாகவும் அது குறிப்பிட்டது.
தெமாசெக்கின் மொத்த முதலீட்டில் 22 விழுக்காடு அமெரிக்காவிலும் 19 விழுக்காடு சீனாவிலும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த நிதி ஆண்டில் சீனாவைக் காட்டிலும் அமெரிக்காவில் அது அதிக முதலீடு செய்தது.
பத்தாண்டுகளில் அந்நிறுவனம் அவ்வாறு செய்திருப்பது இதுவே முதல்முறை.
இந்தியாவில், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் தெமாசெக் US$3 பில்லியன் முதலீட்டைக் குவித்தது. அந்நிறுவனம் செய்துள்ள ஆகப்பெரிய வருடாந்திர முதலீடு அது.
தெமாசெக்கின் இந்திய அலுவலகத்தில் அதிக பணியாளர்களை நியமிக்கும் திட்டமும் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு பண்டாரி, அதுபற்றிய மேல்விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
தற்போது, இந்தியாவின் எச்டிஎஃப்சி வங்கி, ஐபிஓ வெளியிடத் தயாராகும் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் போன்றவற்றின் மீது தெமாசெக் கவனம் செலுத்தி வருகிறது.