கூடுதலாக தனியார் சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களை வழங்கிவரும் சிங்கப்பூரின் ஏழு காப்புறுதி நிறுவனங்களில் ஐந்து, கடந்த ஐந்தாண்டுகளில் லாப-நட்டத்தோடு போராடி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவனங்களின் பெரும்பாலானவை, அதிக நிதி வெளியேறும் வகையிலான காப்புறுதிக் கோரலைச் சந்தித்தன.
அதே ஐந்தாண்டுகளில், ‘இன்கம் இன்சூரன்ஸ்’ மற்றும் ‘புரூடென்ஷியல் சிங்கப்பூர்’ நிறுவனங்கள் மட்டும் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்ட வர்த்தகத்தின் வாயிலாக லாப வளர்ச்சியைச் சந்தித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் திரட்டிய தகவல்கள் தெரிவித்தன.
பொது மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளுக்குச் சலுகை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது மெடிஷீல்ட் லைஃப்.
அந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பராமரிப்புக்கும் மேல் அதிக சிகிச்சைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தனியாரால் கொண்டு வரப்பட்டது ஐபி எனப்படும் ஒருங்கிணைந்தக் காப்புறுதித் திட்டம்.
இந்தப் புதிய திட்டத்தை சிங்கப்பூரின் ஏழு தனியார் காப்புறுதி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
2023 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் இன்கம் இன்சூரன்ஸ் நிறுவனம் $2.9 மில்லியனுக்கும் $29.4 மில்லியனுக்கும் இடைப்பட்ட லாபத்தை ஈட்டியது.
புரூடென்ஷியல் நிறுவனம் $11.4 மில்லியனுக்கும் $64.9 மில்லியனுக்கும் இடைப்பட்ட லாபத்தைச் சம்பாதித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை எச்எஸ்பிசி லைஃப் சிங்கப்பூர், சிங்லைஃப், கிரேட் ஈஸ்ட்டர்ன் லைஃப், ஏஐஏ சிங்கப்பூர் ஆகிய காப்புறுதி நிறுவனங்களின் ஐந்தாண்டு வர்த்தகம் லாப, நட்டம் கலந்ததாக இருந்தது.
ராஃபிள்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டும் தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு $1.7 மில்லியனாக இருந்து அதன் நட்டம் 2023ஆம் ஆண்டு $4.4 மில்லியனாக அதிகரித்தது.

