மானபங்கம் தொடர்பான குற்றங்களுக்காக எட்டு ஆடவர்கள் மீது வியாழக்கிழமை (ஜூலை 18) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது.
அவர்கள் அனைவரும் 25 வயதுக்கும் 82 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜூன் 7ஆம் தேதி வரை அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கக் குற்றத்தில் ஈடுபட்டதாக காவல்துறை புதன்கிழமை (ஜூலை 17) கூறியது.
அவர்களின் காம சேட்டைக்கு இரையானவர்களில் 15 வயது, 16 வயதுடைய இரு சிறார்களும் அடங்குவர்.
குற்றம் புரிந்த எட்டு ஆடவர்களில் முதியவரான 82 வயது ஆடவர், ஜூன் 7ஆம் தேதி கிளமென்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் உள்ள கடையில் 35 வயதுப் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.
மற்றொருவரான 63 வயது ஆடவர், மே 9ஆம் தேதி தியோங் பாரு ரோட்டில் உள்ள கழிவறை ஒன்றில் 16 வயது சிறுவனை மானபங்கம் செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.
மானபங்கக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம்.

