தேசிய பூங்காக் கழகம், கல்வி அமைச்சு குத்தகையாளர்களுக்கு அதிக தொகை

தேசிய பூங்காக் கழகம், கல்வி அமைச்சு குத்தகையாளர்களுக்கு அதிக தொகை

2 mins read
c45404ba-f620-4cda-b669-151c2d703a4f
தேசிய பூங்காக் கழகம் $1.93 மில்லியன் தொகையை அதிகமாக வழங்கியதாக தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கை கூறியது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய பூங்காக் கழகம், கல்வி அமைச்சு ஆகியவற்றின் குத்தகையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைக்கு அதிகமாகச் செலுத்தப்பட்டு இருக்கக்கூடும் என்று தலைமைக் கணக்காய்வாளர் அலுவலக அறிக்கை தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் பூங்காக்களையும் பொதுவெளிகளையும் ஏற்படுத்தி, மேம்படுத்தும் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட குத்தகையாளர்களுக்கு தேசிய பூங்காக் கழகம் $1.93 மில்லியன் தொகையை அதிகமாக வழங்கியதாக மதிப்பிடப்பட்டு உள்ளதாக அது கூறியது.

அரசாங்கக் கணக்குகளுக்கான வருடாந்திர கணக்குத் தணிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகளில் இதுவும் ஒன்று.

அந்த ஆய்வில் கண்டறியப்பட்டவைகளை உள்ளடக்கிய அறிக்கை புதன்கிழமை (ஜூலை 17) வெளியிடப்பட்டது. அதற்கு முதல்நாளான செவ்வாய்க்கிழமை அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கல்வி அமைச்சில் கொள்முதல் மற்றும் குத்தகை நிர்வாகம் தொடர்பான குறைபாடுகள் காணப்பட்டதாக தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை கூறியது.

மூன்று கல்விக்கூடங்களின் கட்டுமான சோதனைகளை அமைச்சு சரிவர நடத்தவில்லை என்று அறிக்கை சுட்டியது. இரண்டு தொடக்கப் பள்ளிகள், ஒரு தொடக்கக் கல்லூரி ஆகியவற்றுக்கான மொத்த குத்தகை மதிப்பு $171.8 மில்லியன்.

ஆயினும், கல்வி அமைச்சு அந்தக் குத்தகைகளுக்கு $317,100 அதிகமாகச் செலுத்தி இருக்கலாம் என்றது அறிக்கை.

2023-2024ஆம் நிதி ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை அரசாங்க அமைப்புகளின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்தது. அரசாங்கத்தின் அனைத்து 16 அமைச்சுகள் மற்றும் 8 அரசாங்க அமைப்புகளின் கணக்கு விவரங்களையும் அது தணிக்கை செய்தது.

மூன்று முக்கிய அம்சங்களில் குறைபாடு காணப்பட்டதை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

கொள்முதல் மற்றும் குத்தகை நிர்வாகம், நிதி மானிய நிர்வாகம், வருவாய் மற்றும் வசூலிப்பு நிர்வாகம் ஆகிய அம்சங்கள் அவை.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு மற்றும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நிர்வகிக்கும் பல்வேறு பிள்ளைப்பேறு ஆதரவு நடவடிக்கைகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

கணக்குத் தணிக்கை நடத்தப்பட்ட 2021 ஏப்ரல் முதல் 2023 ஜூன் இறுதி வரையிலான காலகட்டத்தில், இந்தத் திட்டங்களின்கீழ் அரசாங்கம் $4.55 பில்லியன் தொகையை வழங்கியது.

இதற்கிடையே, தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் குறைபாடுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து தேசிய பூங்காக் கழகம், கல்வி அமைச்சு, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியன காவல்துறையில் புகார் அளித்துள்ளன.

அதேநேரம், அந்த அலுவலகம் கண்டறிந்தவை மீது அரசாங்கம் கடுமையாகக் கவனம் செலுத்துவதாக நிதி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

“குறைபாடுகள் காணப்பட்ட அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளோர் அதற்கான அடிப்படைக் காரணத்தை முழுமையாக ஆராய்வார்கள். குறைபாடுகளைச் சரிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள்,” என்று அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்