குழந்தை மேம்பாட்டுக் கணக்கிலும் அரசாங்க ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பிலும் முறைகேடு நடந்திருப்பது அரசாங்கக் கணக்குத் தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
பெரியோர் அணிந்துகொள்ளும் அளவிலான கறுப்புக் கண்ணாடி போன்ற அனுமதி வழங்கப்படாத பொருள்களை வாங்க, குழந்தை மேம்பாட்டு நிதியிலிருந்து தொகை எடுக்கப்பட்டதை ஆய்வு கண்டறிந்தது.
அரசாங்க அமைப்புகளின் நிதி அறிக்கைகளில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கை விவரங்களை உள்ளடக்கிய தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை புதன்கிழமை (ஜூலை 17) வெளியிடப்பட்டது.
ஊதியத்துடனான பெற்றோர் விடுப்புத் திட்டத்தில் 55 தவறுகள் நடந்திருப்பதற்கான சாத்தியத்தை தணிக்கை ஆராய்ந்தது.
அவற்றில் 26 சம்பவங்களில் மூன்று பெற்றோர்கள் சம்பந்தப்பட்டு இருந்தனர். அந்த வகையில் $690,000 தொகை வழங்கப்பட்டு இருந்தது.
இந்த விவரத்தை கணக்குத் தணிக்கையாளர் கண்டறிந்த பின்னர், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்துள்ளது.
தவறு செய்த முதலாளிகள் மீண்டும் தவற்றைச் செய்யாத வகையில் அவர்களின் பெயர்கள் முடக்கப்பட்டு உள்ளன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு மற்றும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு வழங்கி வரும் பெற்றோர் ஆதரவு நடவடிக்கைளை தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் தணிக்கை செய்ததில் இந்த விவரங்கள் தெரிய வந்தன.
தொடர்புடைய செய்திகள்
ஒன்றுக்கு மேற்பட்ட பொதுத் துறை நிறுவனம் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று வரும்போது மிகவும் ஆழமான சோதனையை கணக்குத் தணிக்கை மேற்கொண்டது.
2023-2024 நிதி ஆண்டுக்குரிய கணக்குகளில் பல்வேறு அமைச்சுகளிலும் பொது அமைப்புகளிலும் முக்கிய குறைபாடுகள் நிகழ்ந்திருப்பதை கணக்காய்வாளரின் முழு அறிக்கை விவரித்தது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பும் தங்களது திட்டங்கள் முறையாக நிர்வகிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யத் தேவையான நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தன.
மானியத் தொகை நிர்வகிப்பில் மனிதத் தவறுகளைத் தவிர்க்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல, தொகை வழங்குவதற்கு அனுமதி அளிப்பதைச் சோதிக்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வந்தது.
தொழில்நுட்பக் கோளாற்றால் மானியத் தொகை நிர்வகிப்பில் தவறு ஏற்படும் சாத்தியம் போன்ற சில அம்சங்களில் மேம்பாடு தேவைப்படுவதை தணிக்கை சுட்டியது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஊதிய விடுப்பு தொடர்பாக வழங்கப்பட வேண்டிய மானியத் தொகைக்கு மேல் $75,700 அனுமதித்த 77 சம்பவங்களை தணிக்கைக் கண்டுபிடித்தது.
பேறுகால விடுப்பு, தந்தையர் விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு போன்றவற்றுக்கு அரசாங்க ஊதியத்துடனான விடுப்பு வழங்கப்படுகிறது.
அதில் குறைபாடுகள் நிகழ்ந்திருப்பதாகவும் தகுதி வரம்பு இல்லாத நிலையிலும் அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை தெரிவித்தது.

