போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது வெளிநாட்டவர் ஜூலை 16ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் ஹாங்காங் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை அடுத்து, அந்தச் சந்தேகப் பேர்வழி சிக்கினார்.
இரண்டு சிங்கச் சிலைகளின் அடிப்பாகத்தில் கிட்டத்தட்ட 4.15 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஜூலை 18ஆம் தேதியன்று கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை விலை ஏறத்தாழ $500,000 என்று தெரிவிக்கப்பட்டது.
சாங்கி சவுத் வட்டாரத்தில் சந்தேப் பேர்வழி கைது செய்யப்பட்டார்.
விமானச் சரக்குக் கிடங்கில் அந்த சிங்கச் சிலைகளைக் கொண்ட பொட்டலங்களை சந்தேகப் பேர்வழி கொண்டுபோய் சேர்த்ததும் அவர் பிடிபட்டார்.
சந்தேகப் பேர்வழியின் நாடு, பாலினம் போன்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
250 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
சந்தேகப் பேர்வழியிடம் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
தகவல் தந்த ஹாங்காங் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் ஹாங்காங் காவல்துறைக்கும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நன்றி தெரிவித்துக்கொண்டது.
மற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்து லாபம் ஈட்டும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை வேருடன் களைய பிற நாடுகளின் அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட இருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.