உலகளவில் முறி, பங்குச் சந்தைகள் மீண்டு வந்துள்ளன.
இதனாலும் வலுக்குறைந்த சிங்கப்பூர் வெள்ளி காரணமாகவும் சிங்கப்பூர் மத்திய வங்கியின் நிகர லாபம் $3.8 பில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் மார்ச் 31ஆம் தேதி வரையிலான 2023-2024க்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முதலீடு செய்ததன் மூலம் $12.7 பில்லியன் கிடைத்ததாக அது கூறியது. அத்துடன், நாணய மாற்று காரணமாக கிடைத்த $1.7 பில்லியனையும் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக $14.4 பில்லியன் லாபம் ஈட்ட முடிந்ததாக ஆணையம் விளக்கியது.
ஒப்புநோக்க, கடந்த 2022-2023 நிதியாண்டில் ஆணையம் $30.8 பில்லியன் இழப்பை சந்தித்ததாக அது தெரிவித்தது. இதுவே ஆணையம் சந்தித்த ஆகப் பெரிய இழப்பாகும் என்றும் அது விளக்கியது. அதற்குக் காரணம் நாணய மாற்று, உயர் வட்டி செலவினம் என்று ஆணையம் கூறியது.
சிங்கப்பூர் மத்திய வங்கியின் லாப ஈவு, இழப்பு யாவும் சிங்கப்பூர் நாணயத்தை, அது மத்திய காலத்தில் நிலையாக இருப்பதை உறுதி செய்ய, வர்த்தக அடிப்படையிலான பல நாணயங்கள் அடங்கிய ஒரு தொகுப்புடன் இணைத்ததால் ஏற்பட்டது என ஆணையம் தெரிவித்தது.
தனது நிதி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அப்போதைக்கு அப்போது உள்ள நாணயங்களின் மதிப்பில் அதை வாங்குவது அல்லது விற்பது என ஆணையம் இயங்கும். அத்துடன், வங்கிகளில் போதுமான நாணயம் இருப்பதையும் அது உறுதி செய்யும் என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.
இதுபோன்ற நாணயம் தொடர்பான நடவடிக்கைகளால், அதிகாரபூர்வ அந்நிய செலாவணி அதிகரிக்கக்கூடும் அல்லது குறையக்கூடும் என்று அது கூறியது. இதன்படி, அதிகாரபூர்வ அந்நிய செலாவணி 2023-2024 நிதியாண்டில் அதன் கையிருப்பு S$497.6 பில்லியன் (அமெரிக்க டாலர் $368.7 பில்லியன்) ஆக இருந்தது.