தைப்பே: தைவான் தனது தற்காப்பை வலுப்படுத்துவதுடன் அது தொடர்பில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற கடப்பாடு கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தைவானின் தற்காப்புக்கு ஆகும் செலவை அந்நாடு ஏற்க வேண்டும் என குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்த சில நாள்களில் தைவானிய வெளியுறவு அமைச்சு மேற்கண்டவாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் அமெரிக்கா தைவானின் முக்கிய நட்பு நாடாகவும் அந்நாட்டுக்கு ஆயுத விற்பனை செய்யும் நாடாகவும் விளங்கி வருகிறது. அமெரிக்கா, தைவான் நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவு இல்லை. எனினும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள தற்காப்பு உடன்படிக்கையின்படி, அமெரிக்கா தைவானின் தற்காப்புக்கு உதவ வேண்டிய கடமை உள்ளது.
தைவான் தனது தற்காப்பை நவீனப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. இதில், சுயமாக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிப்பதுடன், தற்காப்பைப் பொறுத்தவரை அது தன்னைத் தானே நம்பியிருப்பதாகப் பல முறை கூறியுள்ளது. இதன் தொடர்பில் அதன் தற்காப்பு செலவினம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகமான செலவினம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தைவானிய வெளியுறவு அமைச்சின் வட அமெரிக்கப் பிரிவுத் துணைத் தலைவர் குவோயு சாவ், அமெரிக்காவும் தைவானும் பொதுவான உலக நெறிகளாக விளங்கும் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை, ஆகியவற்றைப் போற்றுவதாகக் கூறினார். அத்துடன், இரு நாடுகளும் பரஸ்பர பலனளிக்கும் பொருளியல் உறவு முறையைக் கொண்டுள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார்.