முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வதுரை காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வதுரை காலமானார்

3 mins read
dbb99e8b-e6c3-4f98-9c8b-4784a198ced8
பத்மநாபன் செல்வதுரை - படம்: சிஃபாஸ்

சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூகத் தலைவருமான பத்மநாபன் செல்வதுரை காலமானார். அவருக்கு வயது 92.

வியாழக்கிழமையன்று (ஜூலை 18) தேசிய பல்கலைக்கழகத்தில் மாலை 5 மணியளவில் திரு செல்வதுரையின் உயிர் பிரிந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் 1933ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியன்று திரு செல்வதுரை இலங்கை வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்தார் . மங்க்ஸ் ஹில் வட்டாரத்தில் வளர்ந்த அவர், ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் பயின்று, பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ‘ராடிக் அன்ட் டேவிட்சன்’ சட்ட நிறுவனத்தில் பணியாற்றி, அதன் பங்காளியாக உயர்ந்த இவர், பின்னர் 2008ல் ‘டான் ராஜா அண்ட் சியா’ சட்ட நிறுவனத்தில் ஆலோசகராகச் சேர்ந்தார்.

திரு செல்வதுரை 1967 முதல் 1972 வரை புக்கிட் பாஞ்சாங் தொகுதியிலும் 1972 முதல் 1984 வரை கோ சுவானிலும் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1973ல் இவருக்கும் மருத்துவர் விமலா பாரதிக்கும் கோலாலம்பூரில் திருமணம் நடந்தது.

-

நாடாளுமன்ற மசோதாக்களில் பெரும்பாலானவை அமைச்சர்களால் அறிமுகம் செய்யப்படும்போதும், சிலவற்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்களே அறிமுகம் செய்வர்.

அத்தகைய தனிநபர் மசோதா ஒன்றை திரு செல்வதுரையும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருமான சியாங் ஹாய் டிங்கும் அறிமுகம் செய்து, அதனைச் சட்டமாகச் செயல்படுத்த வகைசெய்தனர். சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்கப் பேராய அலுவலக நடவடிக்கைகளை சிங்கப்பூர் சட்ட அமைப்புடன் இந்தச் சட்டம் ஒருங்கிணைத்தது.

திரு செல்வதுரை, சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் அனைத்துலக உறவுகள் குழுவிலும் முன்னாள் தொடர்பு, தகவல் அமைச்சின் வழிநடத்தும் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

1995 முதல் 2000 வரை, சிங்கப்பூர் தேசிய கண் மருத்து நிலையத்தின் நிர்வாக மேலவையில் இவர் இடம்பெற்றிருந்தார். முன்னாள் ‘என்டியுசி கம்ஃபர்ட்’ நிறுவனத்தின் மேலவை உறுப்பினராகவும் இவர் செயல்பட்டார். 1993 முதல் 2017 வரை இவர் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழகத்தின் (சிஃபாஸ்) தலைவராகவும் செயலாற்றினார்.

அன்பானவரும் பரிவுமிக்கவருமான திரு செல்வதுரை, தம்மைச் சுற்றியுள்ள பலருக்கு வழிகாட்டியாக இருந்ததாக சிஃபாஸ் தலைவர் கே. வி. ராவ் குறிப்பிட்டார்.

“ஈராண்டுகளுக்கு முன்னர் திரு செல்வதுரையின் 90ஆம் பிறந்தநாள் கொண்டாட்ம் சிஃபாஸிலல் நடைபெற்றது. அந்த நினைவுகள் என்றும் இனியவை. மதிப்புமிக்க தலைவரை இந்தியச் சமூகம் இழந்துள்ளது,” என்று திரு ராவ் கூறினார்.

திரு செல்வதுரை சிறப்புமிக்க மனிதர் என்றும் எளிதாகவும் இனிமையாகவும் பழகுபவர் என்றும் சிஃபாஸின் கெளரவ இணைச் செயலாளலர் பி. எஸ். சோமசேகரன் தெரிவித்தார்.

“கூரிய நினைவாற்றலைக் கொண்டிருந்த திரு செல்வதுரை, சட்டத்துறை மட்டுமின்றி இசையிலும் கலையிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தலைவராகச் செயல்பட்டபோது சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழகம் பெருவளர்ச்சியை எட்டியது,” என்றார் திரு சோமசேகரன்.

சிங்கப்பூரில் மிகவும் மதிக்கப்பட்ட, நம்பிக்கைக்கு உரிய, பரிவுமிக்க வழக்கறிஞர்களில் ஒருவராக திரு செல்வதுரை திகழ்ந்ததாக ராஜா டான் அண்ட் சியாவின் மூத்த பங்காளிகளில் ஒருவரான செல்வா ஆர் ராஜா தெரிவித்தார். “ நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக சட்டத்துறையில் இருக்கிறேன். என் கருத்துக்குப் பலரும் உடன்படுவர்,” என்று அவர் கூறினார்.

திரு செல்வதுரையின் நல்லுடல், சனிக்கிழமை (ஜூலை 20) பிற்பகல் 3 மணியளவில் 194ஏ லோர்னி ரோட்டிலிருந்து மண்டாய் தகனச் சாலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கலைஇந்தியர்இலங்கை