சிங்கப்பூரின் பழம்பெரும் வர்த்தகரும் கொடை வள்ளலுமான பி. கோவிந்தசாமி பிள்ளை, சீன வர்த்தகர் டான் கா கீ போன்ற முன்னோடிகளின் அறப்பணி, இன்றுமே சமுதாயத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தேசிய தொண்டூழிய, அறக்கொடை நிலையம் நிலையத்தின் ‘நல்லதோர் நிறுவனம் அங்கீகரிப்பு விழா’ (Company of Good) நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இதனைத் தெரிவித்தார்.
2017ல் தொடங்கப்பட்ட இந்த ஏற்பாட்டில் 45 நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றதை நினைவுகூர்ந்த திரு ஹெங், இந்த எண்ணிக்கை 300ஆக உயர்ந்ததைக் குறிப்பிட்டார்.
‘நல்லவர் சகவாசம்’ பயன்படுத்தும் மதிப்பீட்டு முறை மேம்பட்டுள்ளதைச் சுட்டிய திரு ஹெங், நிறுவனங்கள் புதிய, மாறுபட்ட முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். சிறிய நடுத்தர நிறுவனங்கள் கெளரவ பட்டியலில் சேர்க்கப்பட்டதையும் திரு ஹெங் பாராட்டினார்.
“பரிவுமிக்க, பராமரிப்பு நல்கும், அனைவரையும் உள்ளடக்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு உங்கள் அறப்பணி முக்கியமானது,” என்று திரு ஹெங் கூறினார்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாடு அரங்கில் வியாழக்கிழமை (ஜூலை 18) நடைபெற்ற இந்த அங்கீகார நிகழ்ச்சியில் சுமார் 300 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடினர். அங்கீகாரம் பெற்ற அமைப்புகளில் ஒன்றான யுவபாரதி அனைத்துலக பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெகதீசன் தங்கள் பள்ளி இதனால் பெருமை அடைவதாகக் கூறினார்.
“சமூக மன்றங்கள், தேசிய தின அணிவகுப்பு, சிங்கே அணிவகுப்பு எனப் பல்வேறு இடங்களில் எங்கள் மாணவர்கள் பலவாறு சேவையாற்றுகின்றனர்,” என்றார் டாக்டர் ஜெயஸ்ரீ.

