தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலைய பயணிகள் பதிவுமுறை வழக்கநிலைக்குத் திரும்பியது

3 mins read
09f27f36-828b-4666-8255-511ccf8fdefa
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 4ல் ஏர் ஏஷியா விமானச் சேவையின் முனையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்துக்கொண்டிருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் ஜூலை 20ஆம் தேதி காலை நேரில் கண்டனர். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

சாங்கி விமான நிலையத்தில் உலக அளவிலான இணைய சேவை இடையூறைத் தொடர்ந்து பெரும்பாலான விமானச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன என்று சனிக்கிழமை (ஜூலை 20) சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

எனினும், ஏர் ஏஷியா விமானச் சேவை நிறுவனம் தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக சிரமப்பட்டது. அதனால், அதன் பயணிகள் அனுமதி பெற்றுச் செல்லும் சேவையில் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

இணைய இடையூறுக்குப் பின், பெரும்பாலான விமானச் சேவை நிறுவனங்கள் தங்கள் சேவையை வழக்கநிலைக்குக் கொண்டு வந்துவிட்டன.

இனிவரும் காலங்களில் நடவடிக்கைகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற வர்த்தகங்கள் அந்த அவசரகால மாற்றுத் திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ சனிக்கிழமை (ஜூலை 20) தெரிவித்தார்.

ஜூலை 19ஆம் தேதியன்று உலகளாவிய நிலையில் தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இணையச் சேவை முடங்கியது.

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் பதிவுமுறையும் பாதிக்கப்பட்டது. 10க்கும் அதிகமான விமானச் சேவைகளின் இணையம் வழியான பயணிகள் பதிவுமுறை முடங்கியது. இதனால் 40க்கும் அதிகமான விமானச் சேவைகள் தாமதமடைந்தன.

அதிகாரிகள் கைப்பட எழுதி பயணிகளின் விவரங்களைப் பதிவு செய்தனர். இதனால் விமானச் சேவைகளின் முனையங்களில் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மலிவுக் கட்டண விமானச் சேவைகளான ஏர் ஏஷியா, ஸ்கூட், ஜெட்ஸ்டார், சிபு பசிபிக் ஏஷியா முதலியவை பாதிப்படைந்தன.

பெரும்பாலான விமானச் சேவைகளின் பயணிகள் பதிவுமுறை வழக்கநிலை திரும்பிவிட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமம்  ஜூலை 20ஆம் தேதி காலை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

“தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சில விமானச் சேவைகளுக்குக் கூடுதல் வளங்கள் மூலம் சாங்கி விமான நிலையம் ஆதரவு வழங்குகிறது. பாதிக்கப்பட்ட பயணிகள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 4ல் அதன் சேவை முனையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்துக்கொண்டிருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் ஜூலை 20ஆம் தேதி காலை நேரில் கண்டனர்.

தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பின் விளைவாக விமானச் சேவைகள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டன.

‘கிரவ்ட்ஸ்டிரைக்’ என்ற இணையப் பாதுகாப்பு சேவை நிறுவனம் வழங்கிய மென்பொருள் புதுப்பிப்பில் இருந்த குறைபாடு காரணமாகவே தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

வங்கிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், விமான சேவைகள் உள்பட ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் உலகளாவிய நிலையில் சேவை வழங்குகிறது.

தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பின் விளைவாகப் பாதிக்கப்பட்ட பொரும்பாலான நிறுவனங்களின் சேவை, ஜூலை 20ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படி, வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

நாளிதழ்கள், வானொலி, அஞ்சல் சேவைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசு ஊடகங்களும் ஜூலை 19ஆம் தேதியன்று பாதிப்படைந்தன.

நிலைமையை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.

இந்த உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பை மிகக் கடுமையான பிரச்சினை என்று வருணித்த தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதுகுறித்து கவலை தெரிவித்தார்.

“தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பின் காரணமாக சிங்கப்பூரில் பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க அமைச்சின் குழு இரவு முழுவதும் கடுமையாகச் செயல்பட்டது. பாதிப்படைந்த சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வர தேவையான உதவிகளை வழங்குவதற்கு முன்னுரிமை தரப்பட்டது. பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டன,” என்று அமைச்சர் டியோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் ஏற்பட்ட தாக்கம் சிங்கப்பூரைக் காட்டிலும் பிற நாடுகளில் மோசமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் கூடுதல் மீள்திறனுடன் செயல்பட்டதாக அமைச்சர் டியோ கூறினார்.

சிங்கப்பூரின் அத்தியாவசிய சேவைகளும் அரசாங்கச் சேவைகளும் பாதிப்படையவில்லை என்றார் அவர்.

இந்த உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள மைக்ரோசாஃப்ட் உட்பட மற்ற நிறுவனங்களுடன் உள்ளூர் அமைப்புகள் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் டியோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்