சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கலை, சமூக அறிவியல் பாடத்தில் நிபுணத்துவம் பெற விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் இருக்கும் பதிவுகள் காட்டுகின்றன.
இந்த வகுப்பில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு முதல் சரியத் தொடங்கியதாகவும் தற்போது அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்துள்ளதாகவும் அவை தெரிவித்தன.
பல்கலைக்கழக இணையத்தளத்தில் உள்ள பதிவுகளின்படி, 2019-2020 கல்வி ஆண்டில் சுமார் 6,400 மாணவர்கள் கலை, சமூக அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பயின்றனர்.
மேலும், அந்தக் கல்வி ஆண்டில் இந்தப் பிரிவில் தான் ஆக அதிகமான மாணவர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 4,400 ஆகச் சரிந்ததாகப் பதிவுகள் காட்டுகின்றன.
அதிக ஊதியமும் தொழில் முன்னேற்றமும் தரும் பாடங்களைப் படிப்பதற்கு மாணவர்களுக்குத் தரப்படும் அழுத்தம், மாணவர்களின் ஆர்வம், பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தகுதி வரம்பு ஆகியவை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கலை, சமூக அறிவியல் பாடத்தைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையக் காரணமாக இருக்கலாம் என மாணவர்கள், வல்லுநர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

