சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் முன்னாள் இணை இயக்குநரான 46 வயது கிறிஸ்டஃபர் டான் டோ இங், கிட்டத்தட்ட $472,000க்கு மேல் லஞ்சம் பெற்றார்.
அந்தக் குற்றத்திற்காக அவருக்கும் திங்கட்கிழமையன்று (ஜூலை 22) மூன்று ஆண்டுகள் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் $90,552 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. அந்தத் தொகையை டான் செலுத்தத் தவறினால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையுடன் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
பல்கலைக்கழகத்தின் பயிற்சிப் பிரிவில் பணிபுரிந்த டான், தன்மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளை ஜூலை 1ஆம் தேதி ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற 36 குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.
வெவ்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களாக இருந்த கென்னத் லம் சியன் லூங், ஜெஃப்ரி லோங் சீ, கின் செர் கெங் தான் ஆகிய மூவரிடம் இருந்து டான் லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றங்கள் நடந்த நேரத்தில், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சேவை செயல்பாடுகள், வர்த்தக மேம்பாட்டுத் துறையில் வர்த்தக மேம்பாட்டு இணை இயக்குநராக டான் இருந்தார்.
அத்துறையின் வருவாய், விற்பனை, திட்ட மேலாண்மை ஆகியவற்றை மேற்பார்வையிடுவது அவரது பணியாகும். மேலும், அந்தத் துறையின் பயிற்சி வகுப்புகளைச் சந்தைப்படுத்துவதில் பங்காளிகளை ஈடுபடுத்துவதும் அவருடைய பணிகளில் ஒன்று.
2018ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் பயிற்சி வகுப்புகளை விளம்பரப்படுத்த சந்தைப்படுத்தும் பங்காளியாக விரும்புகிறீர்களா என்று டான் ‘அசட்சுவலைஸ்’ நிறுவனத்தின் இயக்குநரான லாங்கிடம் கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு லோங் ஒப்புகொண்டதால் பல்கலைக்கழகத்திற்கும் லோங்கின் நிறுவனத்திற்கும் ‘இடையே சேவை ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது.
டான், லோங்கிடமிருந்து மொத்தம் $71,300 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதே போன்று ‘இண்டர்நேஷனல் அலயன்ஸ் மார்கெட்டிங்’ நிறுவனத்தின் இயக்குநர் லம்மிடமிருந்து கிட்டத்தட்ட $338,000 பணமும் ‘சிஜெ சினர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் செர்ரிடம் இருந்து $62,800 பணமும் லஞ்சமாக டான் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.