தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் உருமாற்ற முயற்சிகளால் நல்ல பலன்: துணைப் பிரதமர் ஹெங்

2 mins read
6693afab-643f-4839-b64f-4f502c980258
இரண்டாவது ‘சிங்கப்பூர் ஏபெக்ஸ் வர்த்தக உச்சநிலைக் கூட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் பங்கேற்று திரு ஹெங் உரையாற்றினார். - படம்: சிங்கப்பூர் ஏபெக்ஸ் வர்த்தக உச்சநிலைக் கூட்டம்

சிங்கப்பூர் தனது பொருளியலை மறுகட்டமைக்கவும் நிச்சயமற்ற வருங்காலத்திற்குப் பொருந்தக்கூடிய வண்ணம் போட்டித்தன்மையுடன் தொடர்ந்து விளங்கவும் உதவக்கூடிய திட்டம் ஒன்றை சிங்கப்பூர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.

உள்ளூர் ஊழியர்களும் வர்த்தகங்களும் நீண்டகாலத்திற்கு நீடிக்க ஆதரவளிக்கக்கூடிய மறுகட்டமைப்பு நடைமுறை, 23 தொழில்கூடங்களுக்கான உருமாற்றத் திட்டங்களை உள்ளடக்கியது. மேலும், நாட்டின் 80 விழுக்காட்டுப் பொருளியலுக்கான மறுசீரமைப்பு அது.

“அந்த மறுகட்டமைப்பு முயற்சிகள் சிங்கப்பூரர்களின் ஒட்டுமொத்த பொருளியல் பலத்தை வளர்த்து உள்ளன. அத்துடன் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் நாட்டுக்கும் அதன் வருங்காலத்திற்கும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.

“தொடர்ந்து கணிக்க முடியாத, சிக்கலும் மாற்றமும் நிறைந்த வருங்காலத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்பதை இந்த பத்தாண்டு காலத்தின் முதல் காலாண்டுகள் நமக்கு உணர்த்தி உள்ளன. அதிலிருந்து நாம் பெரியதொரு பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.

“வருங்காலப் பொருளியலை நம்மால் இயன்ற வரை நல்ல நிலையில் உருமாற்றுவதற்கான வேகத்தை நாம் தொடர்ந்து அதிகரித்துச் செல்ல வேண்டும். நமது வர்த்தகங்களும் ஊழியர்களும் போட்டித்தன்மையுடன் நீடிக்கவும் நமது மக்களின் வாழ்க்கை தொடர்ந்து முன்னேறறவும் அவ்வாறு செய்வது அவசியம்,” என்றும் அவர் கூறினார்.

“கடந்த 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிங்கப்பூர் பொருளியல் நல்ல நிலையில் ஆண்டுக்கு 2.8 விழுக்காடு என்னும் மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஊழியர் உற்பத்தித்திறனும் அதே காலகட்டத்தில் ஆண்டுக்கு 2.1 விழுக்காடு என்னும் விகிதத்தில் வளர்ச்சி கண்டது.

“மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியும் ஊழியர் உற்பத்தித்திறனும் கடந்த ஏழு ஆண்டுகளில் சிங்கப்பூரை சிறந்த முறையில் வளர்த்தன. நமது மக்கள்தொகைக்கு நிகராக இருக்கக்கூடிய எந்தவொரு பொருளியல் முன்னேற்ற நாடும் கண்டிராத வளர்ச்சியை நாம் அடைந்தோம்.

“அந்த வளர்ச்சி மக்களின் வாழ்விலும் வாழ்க்கைமுறையில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் விளைவாக, முழுநேர சிங்கப்பூர் குடிமக்களின் இடைநிலை வருமானம் 2016ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 1.5 விழுக்காடு என்ற அளவில் வளர்ந்தது,” என்றும் திரு ஹெங் தமது உரையில் குறிப்பிட்டார்.

இரண்டாவது ‘சிங்கப்பூர் ஏபெக்ஸ் வர்த்தக உச்சநிலைக் கூட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் பங்கேற்று திரு ஹெங் உரையாற்றினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் பொருளியல் கண்டுவரும் உருமாற்றத்தை விவரிக்கும் அறிக்கை ஒன்றையும் அவர் அந்நிகழ்வில் வெளியிட்டார்.

வர்த்தகத்துக்கும் விநியோகத் தொடர்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் போன்ற வர்த்தகச் சவால்களையும் அதிகரித்து வரும் தன்னைப்பேணித்தனத்தையும் சமாளிப்பது எப்படி என்பதில் இவ்வாண்டு கூட்டம் கவனம் செலுத்தியது.

முதல் உச்சநிலைக் கூட்டத்தை கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் நடத்தியது.

குறிப்புச் சொற்கள்