அடங்காத பணவீக்கம், அதிகரித்துள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள், சீனப் பொருளியல் ஆகியவை உலக முதலீட்டுச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’ கூறியுள்ளது.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவு பலன் அளிக்கக்கூடும். அந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் கடைப்பிடிப்பதன் மூலம், தானியக்கம், முன்கூற்றுப் பகுப்பாய்வியல் (predictive analytics), மேம்பட்ட முடிவெடுத்தல் போன்ற அம்சங்களில் உற்பத்தித் திறன் உயரக்கூடும் என்று ‘ஜிஐசி’ அதன் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் இருப்புகளை நிர்வகிக்கும் ‘ஜிஐசி’, புதிய வாய்ப்புகளைத் தேடிச்செல்லும் அதே வேளையில், மேலும் உறுதியற்ற முதலீட்டுச் சூழலில் இருக்கும் இடர்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாக்க, மீள்திறன்மிக்க, துடிப்பான முதலீட்டுத் தொகுப்பை உருவாக்கும் தனது முயற்சிகளுக்கு இந்த விசைகள் உதவுவதாகக் கூறியது.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் காலகட்டத்திற்கு 3.9 விழுக்காட்டு லாபம் கிடைத்ததாக ‘ஜிஐசி’ கூறியது.
அண்மைய பெரிய அளவிலான பொருளியல் மீள்திறனைக் காட்டிலும், முதலீட்டுச் சூழலுக்குத் தொடர்ந்து ஆபத்துகள் இருப்பதாக ‘ஷார்ப்பனிங் அவர் எட்ஜ் அமிட்ஸ்ட் சேலஞ்ஜிங் டைம்ஸ்’ என்ற தனது அறிக்கையில் அரசாங்க முதலீட்டு நிறுவனம் கூறியது.
உதாரணமாக, உலகப் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மேலும் தொடர்ந்தாலும் அதிகரித்தாலும், மத்திய வங்கிகள் விகிதங்களைக் கூடுதல் காலத்திற்கு அதிகமாக வைத்திருக்கும் நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல் அவற்றை உயர்த்தவும் கூடும்.
இதற்கிடையே, சீனாவின் சொத்துச் சந்தை மோசமடைந்தால், அந்நாட்டின் பொருளியல் மேலும் மெதுவடையக்கூடிய சாத்தியத்தையும் ‘ஜிஐசி’ குறிப்பிட்டது.
அதோடு, மத்தியக் கிழக்குக் கலவரம் போன்ற புவிசார் அரசியல் பிரச்சினைகள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து, எண்ணெய் விநியோகத்திற்கும் வர்த்தகத்திற்கும் ஏற்படக்கூடிய இடையூறுகள் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று ‘ஜிஐசி’ தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு உற்பத்தித் திறனை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருந்தாலும், அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எல்லா பொருளியல்களும் நிறுவனங்களும் தயாராக இல்லை என்று அது கூறியது.
செயற்கை நுண்ணறிவைக் கடைப்பிடிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரம், சுய மேம்பாடு, விதிமுறைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக அமையும். அதனால் அத்தொழில்நுட்பத்தின் உற்பத்தித்திறன் அதிகரிப்பை அளவிடுவது சிரமமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
அதோடு, அரசாங்கம் துடிப்புடன் சமாளிக்கவேண்டிய சமூக ரீதியான இடர்களையும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கை சுட்டியது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ‘ஜிஐசி’ன் எதிர்கால முதலீட்டு முடிவுகள் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வெவ்வேறு நிறுவனங்களின் திட்டங்களை ‘ஜிஐசி’ புரிந்துகொண்டு, அவற்றைப் பயனுள்ள வழியில் பயன்படுத்தக்கூடிய திட்டங்களை அடையாளம் கண்டு, அந்த நிறுவனங்களின் முக்கியச் சிறப்புகளை உறுதிசெய்யவேண்டும் என்று குழுமத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜெஃப்ரி ஜேன்சுபாகிஜ் கூறினார்.

