3ஜி சேவைக்கு விடைகொடுக்கும் எம்1

2 mins read
3fc7b3f6-2ac6-41ce-a5b4-9d9344695b36
3ஜி கட்டமைப்பிலிருந்து 4ஜி அல்லது 5ஜி கட்டமைப்புக்கு மாற சிங்டெல் மற்றும் ஸ்டார்ஹப் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் தருகின்றன. - படம்: சாவ்பாவ்

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து எம்1 தொலைத்தொடர்பு நிறுவனம் 3ஜி சேவையை வழங்காது.

நவீன திறன்பேசிகள் வெளியானபோது இந்த 3ஜி சேவை அறிமுகம் கண்டது.

3ஜி கட்டமைப்பைப் பயன்படுத்தி வந்த எம்1 நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரும் 4ஜி அல்லது 5ஜி கட்டமைப்புக்கு மாறிவிட்டதால் 3ஜி கட்டமைப்புச் சேவையை அந்நிறுவனம் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருகிறது.

3ஜி கட்டமைப்பிலிருந்து 4ஜி அல்லது 5ஜி கட்டமைப்புக்கு மாற சிங்டெல் மற்றும் ஸ்டார்ஹப் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் தருகின்றன.

நவம்பர் மாதத்திலிருந்து 3ஜி சேவையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அவை திட்டமிட்டுள்ளதாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஜூலை 24ஆம் தேதியன்று தெரிவித்தது.

3ஜி சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும், 3ஜி சாதனங்ளைப் பயன்படுத்துவோர் அவற்றின் மூலம் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், இணையச் சேவைகள் ஆகியவற்றைப் பெற முடியாது.

3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

அதன்மூலம் கைப்பேசி வாயிலாக இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது.

இதன் விளைவாக ஐஃபோன் 3ஜி மற்றும் ஆரம்பகாலத்தில் சாம்சுங் வெளியிட்ட கெலக்சி எஸ் சாதனங்கள் சிறு கணினிகளைப் போல பயன்படுத்தப்பட்டன.

ஜூன் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் கைப்பேசி வைத்திருப்போரில் 0.1 விழுக்காட்டினர் (9,000க்கும் குறைவான கைப்பேசி எண்கள் தொடர்ந்து 3ஜி சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

3ஜி சேவையை முடிவுக்குக் கொண்டு வருவது, நிறுவனங்களின் மின்னிலக்கத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க 5ஜி கட்டமைப்பு தொடர்பான முதலீடுகளுக்கு முன்னுரிமை தருவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

கைப்பேசிகளுக்கான கட்டமைப்பில் 5ஜி கட்டமைப்பு ஆகப் புதியது.

அதன்மூலம் உயர்தர காணொளிகளை ஒளிபரப்பலாம்.

அத்துடன், அதிகமான தரவுகளைக் கையாளும் செயலிகளுக்கும் அது ஆதரவு தருகிறது.

2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 5ஜி சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது கைப்பேசி வைத்திருப்பவர்களில் 20 விழுக்காட்டினர் 5ஜி சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்