எதிர்காலத்தை உறுதிசெய்ய நிறுவனங்களிடம் அணுகுமுறை மாற்றம்: டியோ

எதிர்காலத்தை உறுதிசெய்ய நிறுவனங்களிடம் அணுகுமுறை மாற்றம்: டியோ

2 mins read
779053c6-eb57-4a0c-9bcf-9721130711a4
மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் சிங்கப்பூர் ஏபெக்ஸ் வர்த்தக உச்சநிலைக் கூட்டத்தில் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளாவிய இடையூறுகளுக்கு இடையே, நிறுவனங்கள் தங்களது எதிர்காலத்தை உறுதிசெய்ய ‘ஒருவேளை நிகழ்ந்தால்’ என்னும் அடிப்படையில் இயங்குவதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்து உள்ளார்.

நிச்சயமற்ற உலகக் சூழலில் அத்தகைய அணுகுமுறையை வர்த்தகங்களும் அரசாங்கங்களும் கடைப்பிடிப்பது அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் ஏபெக்ஸ் வர்த்தக உச்சநிலைக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் பங்கேற்றுப் பேசியபோது திரு டியோ இதனைத் தெரிவித்தார்.

வருங்காலத்தில் தங்களது வர்த்தகத்தை உறுதிசெய்யும் நிறுவனங்களையும் விநியோகத் தொடர் இடையூறுகளைக் கடந்து பருவநிலை மாற்றத்திற்கு ஆயத்தமாக பன்மையப் போக்கைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களையும் குறிப்பிட்டு அவர் பேசினார்.

இந்த உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்று இருப்பது இது இரண்டாவது முறை.

இதற்கு முன்னர், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உச்சநிலைக் கூட்டம் நடைபெற்றது. அதனை சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் ஏற்று நடத்தியது.

வர்த்தகத்துக்கும் விநியோகத் தொடர்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் போன்ற வர்த்தகச் சவால்களையும் அதிகரித்து வரும் தன்னைப்பேணித்தனத்தையும் சமாளிப்பது எப்படி என்பதில் இவ்வாண்டு கூட்டம் கவனம் செலுத்தியது.

“கடுமையான விநியோகத் தொடர் இடையூறுகள் நமது நீண்டகால பொருளியல் கணிப்புகளின் போக்கை மாற்றிவிட்டன,” என்றார் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.

“கொள்ளைநோய் விடைபெற்றுவிட்ட போதிலும் இதர இடையூறுகள் இன்னும் நீடிக்கின்றன. மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நடைபெறும் போர்களாலும் இடையூறுகள் குறைந்தபாடில்லை.

“பருவநிலை மாற்றமும் பொருளியல் நடவடிக்கைகளை சீர்குலைக்கின்றன. இயற்கைப் பேரிடர்களின் கடுமையையும் அவை நிகழும் எண்ணிக்கையையும் பருவநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன.

“நாடுகளும் தங்களது சொந்தத் தொழிற்கூடங்களைப் பாதுகாக்க தாராள வர்த்தகம் என்பதில் இருந்து மாறி தடைகளை விதித்து வருகின்றன.

“அவை ஒன்றோடொன்று சேர்ந்து பணியாற்றாமல் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி தனித்தனியாகச் செயல்படுகின்றன,” என்று திரு டியோ தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்