அண்மையில் மற்றொரு கப்பலுடன் மோதிய சிங்கப்பூர் கொடி தாங்கிய ‘ஹாஃப்னியா நைல்’ எண்ணெய்க் கப்பலின் சேதமுற்ற பகுதியில் இருந்து கடலுக்குள் எண்ணெய் சிந்தியதாக அந்தக் கப்பலுக்குச் சொந்தமான ஹாஃப்னியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மோதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 6 மணியளவில் பெட்ரா பிராங்கா தீவுக்கு வடகிழக்கே 55 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது.
மோதலின் விளைவாக எண்ணெய்க் கப்பலின் இயந்திர அறை சேதமடைந்திருப்பதை ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அந்நிறுவனம் புதன்கிழமை (ஜூலை 24) கூறியது.
சேதமடைந்த பகுதியில் இருந்து எண்ணெய் வெளியேறியதை மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளை உறுதி செய்ததாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
கப்பலின் சேதமடைந்த பகுதிகளில் நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் கடற்பகுதியில் கடல்துறை தேடல், மீட்பு வட்டாரத்திற்குள் கப்பல் மோதிய சம்பவம் நிகழ்ந்தபோது இரு கப்பல்களில் இருந்தும் 36 பேர் மீட்கப்பட்டனர்.

