சிங்கப்பூரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது: உள்நாட்டு பாதுகாப்பு துறை

2 mins read
10aacf0a-e15f-4e12-9ee9-ca75414eb79c
சிங்கப்பூருக்கு உடனடியாக எந்தவித அச்சுறுத்தல் இல்லை என்றாலும் கண்காணிப்பு தேவை என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளது.

அந்தப் போர் உலகில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவிட்டுள்ளது. அது சிங்கப்பூரை பாதித்துள்ளது.

இதைத் தனது ஜூலை 25ஆம் தேதி ஆண்டறிக்கையில் தெரிவித்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, பயங்கரவாத அமைப்புகள் இந்தப் போரை தங்கள் சொந்த இலக்குகளுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்று கூறியது.

சமூக ஊடகங்களில் சிங்கப்பூருக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகளால் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் வட்டார ஊடகவியலாளர்களில் சிலர், சிங்கப்பூர் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுத்திருப்பதாக எண்ணம் கொண்டுள்ளனர் என்று அது கூறியது.

சிங்கப்பூருக்கு உடனடியாக எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் கண்காணிப்பு தேவை என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.

‘ஆப்பரேஷன் புரோஸ்பெரிட்டி கார்டியன்’ (Operation Prosperity Guardian) என்ற நடவடிக்கையில் சிங்கப்பூர் பங்குபெற்றதால் சில பயங்கரவாத அமைப்புகள் சிங்கப்பூருக்கு எதிரான நிலையை எடுத்துள்ளன என்று அந்தத் துறை விளக்கியது.

அந்த நடவடிக்கை செங்கடலில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் விதமாக ஏமனின் ஹூதி போராளிகள் தாக்குதல் நடத்துவதை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட அனைத்துலக கடற்துறை பாதுகாப்புப் படை என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இதில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சிங்கப்பூர் ஆயுதப் படைகள் தகவல் பரிமாற்றத்துக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடுவதிலும் பங்கேற்க 12 பேரை அனுப்பி உதவியது.

இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மீது வெடிகுண்டுகள், ராக்கெட்டுகள் போன்றவற்றைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூரை அழித்து ஒழித்துவிட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவுகள் வந்துள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவில் ஆகாயத் தாக்குதலை மேற்கொண்டது.

இந்தப் போரில் இதுவரை 40,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரால், உலகெங்கிலும் வெறுப்புணர்வு குற்றங்களும் சமயம் சார்ந்த தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக துறை கூறியுள்ளது.

சிங்கப்பூரில் சுய தீவிரவாதப் போக்கு அச்சுறுத்தலுக்கு வித்திடுவதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 52 சுயமாக தீவிரவாதப் போக்கை தழுவியர்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆணை பிறப்பித்துள்ளது.

இவர்களில் 40 பேர் சிங்கப்பூரர்கள், அதில் 13 பேர் 20 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள் என்று துறை விளக்கியது.

குறிப்புச் சொற்கள்