இணையத் துன்புறுத்தல் போன்ற தீங்குமிகு உள்ளடக்கத்தால் 74 விழுக்காட்டினர் பாதிப்பு

இணையத் துன்புறுத்தல் போன்ற தீங்குமிகு உள்ளடக்கத்தால் 74 விழுக்காட்டினர் பாதிப்பு

2 mins read
இணையப் பயன்பாடு குறித்த ஆய்வு
42eb1fd5-4b5e-43d6-8b2e-a6682fe71520
இணையத்தில் இன, சமய பதற்றத்தை தூண்டுவதுடன் வன்முறை தொடர்பான பொருளடக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையத் துன்புறுத்தல் அல்லது பாலியல் போன்ற தீங்குமிகு இணையப் பொருளடக்கத்தை அதிகப்படியான இணையப் பயன்பாட்டாளர்கள் அனுபவிக்கின்றனர். இவ்வாண்டு 74 விழுக்காடு இணையப் பயன்பாட்டாளர்கள் இதை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

இதுவே 2023ஆம் ஆண்டு 65 விழுக்காடு இணையப் பயன்பாட்டாளர்கள் இதுபோன்ற இணைய துன்புறுத்தல் அல்லது தீங்குமிகு பொருளடக்கத்தை எதிர்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், இவர்களில் நால்வரில் ஒருவர் மட்டுமே இது குறித்து புகார் அளிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஏப்ரல் மாதம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆய்வில் தெரியவந்துள்ள தீங்குமிகு இணையப் பொருளடக்கத்தில் இன அல்லது சமய பதற்றத்தை தூண்டும் விதமாகவும் வன்முறை தொடர்பான பொருளடக்கமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவை முறையே, 13 மற்றும் 19 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வு விவரிக்கிறது. ஆய்வில் 15 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட 2,098 பேர் பங்கேற்றனர். இவர்களில் குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் 66 விழுக்காட்டினர் தீங்குமிகு பொருளடக்கத்தை எதிர்கொண்டனர். இந்தச் சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக், ஹார்ட்வேர்ஸோன் போன்ற தளங்களும் அடக்கம்.

2023ஆம் ஆண்டு தொடர்பு, தகவல் அமைச்சு நடத்திய இதேபோன்ற ஆய்வுடன் ஒப்பிடுகையில் இணையத் தீங்குமிகு பொருளடக்கம் தற்பொழுது 57 விழுக்காடு கூடியுள்ளது.

இணையப் பயன்பாட்டாளர்கள் இதுபோன்ற தீங்குமிகு இணையப் பொருளடக்கத்தை எதிர்கொள்வதைத் தவிர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் தாண்டி இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், இன்ஸ்டகிராம், டிக்டாக், எக்ஸ், யூடியூப், ஃபேஸ்புக், ஹார்ட்வேர்ஸோன் ஆகியவையே அந்தக் குறிப்பிட்ட ஆறு சமூக ஊடகத் தளங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க அளவு மக்களிடையே ஈர்ப்புத்தன்மை இருப்பதால், இவை தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையம் வகுத்துள்ள இணையப் பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டும். ஆணையத்தின் இந்த நெறிமுறைத் தொகுப்பு 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடப்புக்கு வந்தது.

இந்த நெறிமுறைத் தொகுப்பு இணையத்தில் தீங்குமிகு பொருளடக்கத்தை குறைக்க வேண்டும். அத்துடன், சிறாருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையிலும் இந்த நெறிமுறைத் தொகுப்பு வகுக்கப்பட்டுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்