மே மாத தொழிற்சாலை உற்பத்தி உயர்வு கண்ட நிலையில் அதற்கு நேர்மாறாக ஜூன் மாத தொழிற்சாலை உற்பத்தி சரிவைக் கண்டது.
கணினிச் சில்லு உற்பத்தி குறைவே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
ஆண்டு அடிப்படையில் மொத்த உற்பத்தி 3.9% குறைந்தது. இதுவே மே மாதம் சரிசெய்யப்பட்ட தொழிற்சாலை உற்பத்தி 2.3% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புளூம்பெர்க் நிறுவன பொருளியல் நிபுணர்கள் தொழிற்சாலை உற்பத்தி 0.1% சரிவைக் காணும் என்று கூறியிருந்தனர்.
அதிக ஏற்ற இறக்கம் காணும் உயிர்மருத்துவ தொழிற்துறையைத் தவிர்த்துப் பார்த்தால், தொழிற்சாலை உற்பத்தி 1.6% சரிவு கண்டதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 26ஆம் தேதி) பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட புள்ளிவிவரக் கணக்கு காட்டுகிறது.
மாத அடிப்படையில் பருவத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட தொழிற்சாலை உற்பத்தி ஜூன் மாதம் 3.8% சரிந்தது. இதில் உயிர்மருத்துவ உற்பத்தியை தவிர்த்துப் பார்த்தால் வீழ்ச்சி 6.4% எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவு வகிக்கும் மின்னியல் துறையின் உற்பத்தி, ஆண்டு அடிப்படையில் 5.5% சரிவைக் கண்டது. இந்தத் துறை மே மாதத்தில் 18.6% வளர்ச்சி கண்டது.
மின்னியல் துறையிலேயே, தொழிற்சாலை உற்பத்தியில் ஏறக்குறைய 41% பங்கு வகிக்கும் பகுதி மின்கடத்தி துறையில் உற்பத்தி 9.4% வீழ்ச்சி ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உற்பத்தியில் ஆக மோசமாக விளங்கியது உயிர்மருத்துவத்துறை. இதன் ஜூன் மாத உற்பத்தி, சென்ற 2023ஆம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 23.2% வீழ்ச்சியை பதிவு செய்தது.
இந்தத் துறையில், மருத்துவத் தொழில்நுட்பப் பிரிவின் உற்பத்தி 11.4% உயர்வை பதிவு செய்தது. இதற்குக் காரணம், மருத்துவச் சாதனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்த தேவை அதிகரிப்பு என்று கூறப்படுகிறது.
போக்குவரத்துப் பொறியியல் துறையின் உற்பத்தி சென்ற 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூன் மாதம் 10.3% உயர்வைச் சந்தித்தது.
விமானப் பாகங்களின் அதிகரித்த உற்பத்தி, விமானங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, சீரமைப்புப் பணிகளால் ஆகாயத் துறை உற்பத்தி 12.4% உயர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
துல்லிய பொறியியல் துறையில் அனைத்துப் பிரிவுகளும் சரிவைச் சந்தித்த நிலையில், உற்பத்தி 3.2% குறைந்தது.
இந்நிலையில், உணவு, பான, புகையிலை பிரிவுகள் வழி பொது உற்பத்தி ஜூன் மாதம் 1.6% கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.