வயிற்றுப் பிரச்சினையால் குடிமைத் தற்காப்பு படையில் 165 பேரின் உடல்நலன் பாதிப்பு

வயிற்றுப் பிரச்சினையால் குடிமைத் தற்காப்பு படையில் 165 பேரின் உடல்நலன் பாதிப்பு

2 mins read
cd30b8ee-b512-4d6a-aa4f-480b70293eed
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பயிற்சி நிலையம். - படம்: குடிமைத் தற்காப்புப் படை

வயிற்றுப் பிரச்சினையால் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் 160க்கும் மேற்பட்டவர்களுக்கு செவ்வாய்க்கிழமைக்கும் (ஜூலை 23 ஆம் தேதி), புதன்கிழமைக்கும் இடைப்பட்ட காலத்தில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் புதன்கிழமை வரை 165 பேருக்கு வயிற்றுப் பிரச்சினை தொடர்பான அறிகுறிகள் இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது தெரிவித்தன. எனினும், இது தொடர்பில் எவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு வயிற்று அசௌகரியம், வயிற்றுப் போக்கு போன்ற மிதமான உடல்நலப் பிரச்சினைகளே இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.

“பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது,” என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமையல் கூடம், தங்குமிடங்கள் முழுவதும் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டதாக படை விளக்கியது.

“குடிமைத் தற்காப்புப் படை தனது வீரர்களின் உடல்நலனைக் கட்டிக் காப்பதில் கடுமையான போக்கைக் கொண்டுள்ளதால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசாரித்து வருகிறது,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விளக்கியது.

விசாரணை முடியும்வரை சமையல் கூடம் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் மாற்று உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அது கூறியது.

உணவு வழங்குபவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக உணவு அமைப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்