தேவையுள்ளோர் பயனடைய மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் (பிசிஎஃப்) வியாழக்கிழமை (ஜூலை 26) $7 மில்லியன் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 20,000 பிள்ளைகள் வரை இந்த நிதியால் பயன்பெறலாம். மேலும், பிசிஎஃப் ஊழியர்களுக்கு 50,000 தொண்டூழிய வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு ‘பிசிஎஃப் தொண்டு வாரம் 2024’ன் இறுதி நிகழ்ச்சியில் வெளியானது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.
“1986ல் அமைக்கப்பட்ட பிசிஎஃப், அன்றிலிருந்து ஒவ்வொருவரின் வயதையோ அவர்களின் பின்னணியையோ பொருட்படுத்தாமல், சமூகத்திற்கு சேவையாற்றி, மக்களை ஊக்குவிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இப்போது, சிங்கப்பூரின் மிகப்பெரிய பாலர் பள்ளி சேவைகளை வழங்குபவராகவும், முதியவர்களுக்கு சேவை வழங்குபவராகவும் பிசிஎஃப் முன்னேறியுள்ளது. தினசரி 40,000 பிள்ளைகள், 10,000 மூத்தோரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
“சிங்கப்பூர் முழுவதும் வாழ்க்கையில் தொடர்ந்து பிரகாசிக்க அது முற்படுகிறது,” என்று திருவாட்டி டியோ கூறினார்.
இறுதி நிகழ்ச்சியில் பிசிஎஃப் உறுப்பினர்களுடன் முதியவர்களும் இணைந்து ‘பூங்காவில் முதியவர்களுடன் காலை உணவு’ என்ற நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிகழ்ச்சியில் ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்’ பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் ஆடல் பாடல் அங்கங்களுடன் முதியோருக்கான நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
ஊழியர்கள், முதியவர்கள், குடும்பங்களுக்கு 50,000 தொண்டூழிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அர்த்தமுள்ள தொடர்புகளையும் செயல்பாடுகளையும் அதிகரிக்க இவ்வாய்ப்புகள் உதவும்.
அடித்தள அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள், அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து இவை வழங்கப்படும்.
இவ்வாண்டின் பிற்பாதியில் பிசிஎஃப் புதிய இணைப்புகள், நடவடிக்கைகள் மூலம் முதியோர்க்கு அதிக சமூக ஈடுபாட்டை மேம்படுத்தும். இது, அவர்களுக்கு ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை உருவாக்க ஊக்குவிக்கிறது.
பிசிஎஃப் வழங்கும் புதிய நன்கொடை, தற்போதைய முயற்சிகளை மேம்படுத்தி குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும். அத்திட்டங்கள், ‘ஹெட்ஸ்டார்ட் ஃபண்ட்’ (Headstart Fund) ‘ஸ்பார்க் ட்ரீம்ஸ்’ திட்டத்தின் விரிவாக்கம், அன்பின் பரிசுகள், மாணவர்களுக்கான பள்ளி பொருள்கள் போன்றவை ஆகும்.
பிசிஎஃப் தொண்டு வாரம் 2024
இந்த தொண்டூழிய வாரம் ஜூலை 22 முதல் ஜூலை 26 வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 2,000 தொண்டூழியர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம் ஆறு முக்கிய நிகழ்ச்சிகளும் 4,000 மணி நேர சமூக சேவையும் இடம்பெற்றன.
அனைத்து நிகழ்வுகளும் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கும் ‘ஸ்பார்க்கல் கேர்’இல் உள்ள முதியவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிசிஎஃப் தலைமை நிர்வாக அதிகாரி விக்டர் பே, “எங்கள் பராமரிப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கப்படும் எங்கள் சேவை, எங்கள் சமூக சேவை மையங்களில் மட்டும் நின்றுவிடாது. அதற்கு அப்பாற்பட்டும் எங்களுக்கு அவர்கள் மேல் அக்கறை உள்ளது.
“பிணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறோம்,” என்று சொன்னார்.
பிசிஎஃப் உறுப்பினராகவும் நிகழ்ச்சி பங்கேற்பாளருமான ஆரோக்கியா மேரி, 73, “முதியோர்க்கு தினமும் புதுப்புது நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் நான் தினமும் பங்கேற்பேன்.
“பிசிஎஃப் மருத்துவ ரீதியாக எங்களுக்கு உதவியுள்ளது. மருத்துவச் சேவைகள் பலவற்றை எங்களுக்கு அது வழங்கும்,” என்றார்.
மற்றொரு பங்கேற்பாளரான சரஸ்வதி ரத்னவேலு, 72, “நான் தனியாக வசிக்கிறேன். ஆனால், ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை பிசிஎஃப் எனக்கு அளித்துள்ளது. தினமும் உடற்பயற்சி வகுப்புகளுக்கு நான் செல்வேன். ஆக, எனக்கு ஒரு துடிதுடிப்பான வாழ்க்கைமுறை கிடைத்துள்ளது.
“சில நேரங்களில் வீட்டுக்கு தொண்டூழியர்கள் வந்து எனக்கு ஆதரவளிப்பர். நான் தனிமையாக இருப்பதை உணர்வதில்லை,” எனக் கூறினார்.

