ஃபிக்கா எனப்படும் வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் என்டியுசி அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 26ஆம் தேதி) அன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், என்டியுசி நிறுவனத்தை இவ்வாறு குறிப்பிடப்போவதாக தான் ஜூலை 11ஆம் தேதி கூறி கடிதம் அனுப்பியதற்கு என்டியுசியிடமிருந்து எந்தவிதமான கருத்தும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தது. ஃபிக்கா எனப்படும் இச்சட்டம் உள்ளூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீடு இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.
என்டியுசி நிறுவனம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சு என்டியுசிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அன்று தெரிவித்தது. இதனால் என்னவாகும் என்றால், வெளிநாட்டு மற்றும் அரசியல் ரீதியாக $10,000 வெள்ளி அல்லது அதற்கு மேற்பட்ட நன்கொடைகள் என்டியுசிக்கு கிடைத்தால் அது குறித்து அந்நிறுவனம், வெளிநாட்டு மற்றும் அரசியல் வெளிப்பாடுகளின் பதிவாளருக்கு ஆண்டுதோறும் தெரிவிக்க வேண்டுமென்று ஃபிக்கா சட்டம் கூறுகிறது.
அத்துடன், நிறுவனத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றியும் அது தெரிவிக்க வேண்டும்.
“இதுபோன்ற வெளிப்படைத்தன்மை உடைய தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டியுள்ளதால் என்டியுசி நிறுவனம் வெளிநாட்டுத் தலையீடுக்கு ஆட்படுவதை மிதப்படுத்தும்,” என்று அமைச்சு விளக்கியது.