‘ஒர்க் பாஸ்’ எனப்படும் வேலை அனுமதி அட்டை விண்ணப்பத்தின்போது பொய்த் தகவல் அளித்ததற்காக 2023ஆம் ஆண்டில் பத்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய நாட்டுப் பணிப்பெண் மேல்முறையீட்டிற்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து 44 வயது திருவாட்டி அல்கா மேல்முறையீடு செய்திருந்தார்.
பணிப்பெண்ணாகப் பணிபுரியும் நோக்கம் இல்லாதபோதிலும் திரு அனில் திரிபாதி என்பவரால் பணிப்பெண்ணாக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாக திருவாட்டி அல்கா பொய்த் தகவல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
திருவாட்டி அல்காவுக்கும் திரு அனிலுக்கும் பரஸ்பர பலனளிக்கும் வகையில் அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டதாக திருவாட்டி அல்காவுக்குத் தண்டனை விதித்த மாவட்ட நீதிபதி முடிவுக்கு வந்தார்.
திருவாட்டி அல்காவின் முதலாளியாகப் பெயர் அளவில் மட்டுமே திரு அனில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பதிலுக்குச் சிங்கப்பூரில் தமது காதலருடன் இருக்க திருவாட்டி அல்கா அனுமதிக்கப்பட்டதாகவும் வாரத்துக்கு மூன்றிலிருந்து நான்கு நாள்களுக்குத் திரு அனிலுக்காக அவர் உணவு சமைத்துத் தர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் மாவட்ட நீதிபதி கூறினார்.
திரு அனிலுக்காகத் திருவாட்டி அல்கா பணிபுரிந்ததால், பொய்த் தகவல் கொடுக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது திருவாட்டி அல்காவின் வழக்கறிஞர் திரு சர்பிரிந்தர் சிங் வாதிட்டார்.
இந்நிலையில், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜூலை 25ஆம் தேதியன்று திருவாட்டி அல்காவை விடுவித்தார்.
சம்பளம் பெறாமல் அவ்வப்போது உணவு சமைத்துக் கொடுப்பதும் சிறுசிறு வேலைகள் செய்வதும் வேலையாக எடுத்துக்கொள்ளப்படும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்துக்கு உட்பட்டு திருவாட்டி அல்கா வேலையில் அமர்த்தப்பட்டதாகக் கூறிய நீதிபதி, பொய்த் தகவல் எனக் கூறப்பட்டது, உண்மையில் பொய்த் தகவல் அல்ல என்று தெரிவித்தார்.
வழக்கின்போது முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் குற்றத்தை நிரூபிக்கவில்லை என்றார் அவர்.
திருவாட்டி அல்கா 2014ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தார்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரது சேவைகள் இனி தேவையில்லை என்று அவரது அப்போதைய முதலாளி தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரில் தொடர்ந்து இருக்க விரும்புவதாகத் தமது காதலர் திரு குர்விந்தர் சிங்கிடம் திருவாட்டி அல்கா விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து, திரு அனிலிடம் திருவாட்டி அல்காவை அவரது காதலர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
திரு அனில் இந்தியாவைச் சேர்ந்தவர்.
திரு அனில் தமது முதலாளி என்று தெரிவித்து, பணிப்பெண் வேலை நியமனப் படிவத்தில் திருவாட்டி அல்கா கையெழுத்திட்டார்.
இந்தப் படிவம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று மனிதவள அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, சிராங்கூன் சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனை உதவியாளராகப் பணிபுரிந்ததற்காக 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று திருவாட்டி அல்காவை மனிதவள அமைச்சின் அதிகாரிகள் கைது செய்தனர்.
தகுந்த வேலை அனுமதிச்சீட்டு இல்லாமல் விற்பனை உதவியாளராகப் பணிபுரிந்த குற்றத்தைத் திருவாட்டி அல்கா ஒப்புக்கொண்டார்.
இதற்காக அவருக்கு $4,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவில்லை.
திரு அனிலின் வீட்டில் தாம் நான்கு மாதங்கள் தங்கியதாகவும் அதன் பிறகே தம் காதலருடன் தங்க அனுமதிக்கப்பட்டதாகவும் திருவாட்டி அல்கா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திரு அனிலின் வீட்டில் தங்காதபோதிலும் அங்கு வீட்டுவேலை செய்ய சென்றதாக அவர் கூறினார்.
வீட்டு வேலை செய்ததற்காகத் தமக்கு மாதந்தோறும் $450 சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் திருவாட்டி அல்கா தெரிவித்தார்.
ஆனால் அதற்கான ரசீதுகளோ பதிவுகளோ இல்லை என்றார் அவர்.
வேலை அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் திருவாட்டி அல்கா தங்குவதை உறுதி செய்யத் தவறியதற்காகத் திரு அனிலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் தம்மை விடுவித்ததும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திருவாட்டி அல்கா தொலைபேசி மூலம் பேசினார்.
தமக்கு உதவிய வழக்கறிஞர் திரு சர்பிரிந்தர் சிங்கிற்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தாம் கைது செய்யப்பட்டதிலிருந்து தம் நண்பர்களுடன் தங்கி வருவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் தொடர்ந்து இருக்க தமக்குச் சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்டதாகவும் அது ஜூலை 30ஆம் தேதி காலாவதியாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் தொடர்ந்து பணிபுரிய தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தம்மை வேலையில் அமர்த்த உணவகம் ஒன்று தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.