மொழி, இனம், சிந்தனை ஆகியவற்றைச் சார்ந்த எல்லைகளைக் களைந்து சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது சிங்கப்பூர்க் கவிதை விழாவின் தொடக்க நிகழ்ச்சி.
‘கட்டவிழ்த்து’ (un.bound) என்ற இந்த ஆண்டின் கருப்பொருளுக்குப் பொருத்தமாக பாவேந்தர் பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாடல், விழாவைத் தொடங்கி வைத்தது.
பாரதிதாசனின் எழுச்சிமிக்க வரிகளை இனிய பாடலாக வழங்கினார் தினேஷ் குமார். ரூஃபஸ் ஷாலெர்மேன் இசையும் கிரிஷ்மிதாவின் அபிநயமும் பாடலை மேலும் ரசிக்க வைத்தன.
சிங்கப்பூரின் தேசிய மொழிக் கவிதைகளுக்குப் பரவலான அறிமுகத்தைப் பெற்றுத்தருவதோடு, சிங்கப்பூர்க் கவிஞர்களிடையே அறிமுகத்தையும் உரையாடலையும் ஏற்படுத்தும் நோக்கில், தொடக்க நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு மொழியைக் கவிதை விழா முன்னிலைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டு தமிழ்மொழி முன்னிலைப்படுத்தப்பட்டது.
கவிதை விழாவின் எளிய தொடக்கத்தையும் பத்தாண்டுகளில் அதன் வளர்ச்சி, பரவலான அறிமுகத்தையும் பற்றி, சிங்கப்பூர்க் கவிதை விழாவின் இயக்குநரான எரிக் டின்ஸி வால்ஸ் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
மொழி, பண்பாடு, சமய நம்பிக்கைகள் போன்ற பலவற்றையும் கடந்து பண்பாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறது இந்த விழா என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலாசார விருது பெற்ற கவிஞர் க.து.மு.இக்பால் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘நரை வெளிச்சம்’ கவிதையை வாசித்தார்.
‘எல்லைகளைக் கட்டவிழ்த்தல்’ என்ற தலைப்பில் தொடக்கவுரை ஆற்றிய சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன், கிரேக்க நம்பிக்கைகளுக்கும் இந்திய நம்பிக்கைகளுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஷெல்லியின் புரோதமீஸ் கடவுளிடம் போராடி மனிதர்களுக்கு நெருப்பை வாங்கிக் கொடுத்ததைப் போல, எப்படிப் பாரதிதாசன் உணர்வெழுச்சி ஊட்டினார் என்பதை அவர் சுட்டினார்.
‘கட்டுப்பாடுகளைக் களைந்து’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், உலகளாவிய நிலையில் கவிதை என்பது உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன் கட்டுப்பாடுகளை மக்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துகிறது என்பதை விளக்கினார்.
கவிஞர்கள் அவற்றை எவ்வாறு சொற்கள் வழியாகக் கடந்து சென்று, அந்த உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
வில்லியம் வோர்ட்ஸ்வோர்த், டிலன் தாமஸ், தாமஸ் கிரே, ஜிம் மோரிசன் போன்றோரின் சிறந்த ஆங்கிலக் கவிதைகளைக் குறிப்பிட்டு உரையைத் தொடங்கிய சித்ரா சங்கரன், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் எவ்வாறு இந்தக் கருப்பொருள் கையாளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டினார்.
க.து.மு.இக்பாலின் வேர்கள் கவிதையில் வரும் ‘அடங்கி இருப்பதால் வெட்டப்படாமல் இருக்கிறோம்’, ‘பூமிக்குள் நாங்கள் மூச்சடக்குவது நீங்கள் சுவாசிப்பதற்காகவே’ ஆகிய வரிகளை குறிப்பிட்டுப் பேசிய அவர், வளைந்துகொடுக்காத, இரக்கமற்ற சக்திக்கு எதிரான அமைதியான எதிர்ப்பும் பொறுமையும் கட்டுப்பாடுகளைக் களைகின்றன என்பதை விளக்கினார்.
மேலும், பல சிங்கப்பூர்க் கவிதைகளை எடுத்துக்கூறிய அவர், வெவ்வேறு சூழல்களில் கட்டுப்பாடுகளைக் களைவது பற்றி அழகாக எடுத்துச் சொன்னார்.
நிகழ்ச்சி எல்லாவிதத்திலும் சிறப்புற்று விளங்கியது என்று கூறிய முனைவர் சித்ரா சங்கரன், இவ்வாண்டு கவிதை விழாவின் தலைப்பு சிங்கப்பூர்ச் சமுதாயத்துக்கு, குறிப்பாக சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் பொருத்தமானது என்றார்.
“குடியேறிய மக்களான சிங்கப்பூர்த் தமிழர்கள், பல ஊர்களில் இருந்து தங்களது பல கட்டுப்பாடுகளைக் களைந்துவிட்டு ஆசையுடன் வேட்கையுடன் வந்தவர்கள். கட்டுப்பாடுகளைக் களைவது இந்த மக்களின் எண்ணப்போக்கிலேயே ஊறிப்போயுள்ளது,” என்றார் அவர்.
தேசிய கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிஞர் நீதிப்பாண்டியின் கவிதையை அவர் வாசித்தார்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து மூத்த கவிஞர்களின் கவிதை வாசிப்பு நடைபெற்றது.
முன்னோடிக் கவிஞர்கள் பேராசிரியர் எட்வின் தம்பு, க.து.மு.இக்பால், லீ ஸு பெங், ஸ்டெல்லா கோன், வோங் யூன் வா, ராபர்ட் இயோ முதலியோரை ஒரே மேடையில் காண முடிந்தது அரிய நிகழ்வாக அமைந்தது.
சமுதாயம், சூழல், சிந்தனை அனைத்தும் வரையறுக்கும் எல்லைகளைக் கடந்து அன்பும் விடுதலையும் பெற்றிருப்பதைக் கவிதைகள் வழியாக எடுத்துச் சொல்கிறது இவ்வாண்டின் கவிதை விழா.
பத்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் கவிதை விழாவில், இவ்வாண்டின் தொடர் கவிதை வாசிப்பு பல்வேறு அங்கங்களாக இடம்பெறுகின்றன. மூன்று நாள்களில் நடைபெறும் 19 நிகழ்ச்சிகளில் மூத்த கவிஞர்கள் முதல் இளம் கவிஞர்கள் வரை 200க்கும் அதிகமான கவிஞர்கள் கவிதை படைக்கிறார்கள்.
சிங்கப்பூர்க் கவிதை விழா 2024 ‘un.bound’ விவரங்களுக்குக் காண்க: pfs2024.peatix.com

