தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோ பாயோவில் காரை துரத்திச் சென்ற காவல்துறை; போதைப் பொருள், கத்தி கண்டுபிடிப்பு

2 mins read
d2f9265a-24af-488e-b002-be028f69f621
சந்தேக நபர்கள் சென்ற கார் விளக்குக் கம்பத்தின்மீது மோதி நின்றது. காரிலிருந்து இறங்கி தப்பியோடிய சந்தேக நபரை அதிகாரி ஒருவர் துரத்திப் பிடிக்கிறார். - படம்: ஃபேஸ்புக்/ எஸ்ஜி ரோட் விஜிலாண்டே காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்.

தோ பாயோவில் அதிவேகமாக ஓடிய காரை காவல்துறையினர் துரத்திச்சென்று பிடிக்க முயற்சி செய்தனர். கடைசியில் அந்தக் கார் தோ பாயோவில் உள்ள விளக்குக் கம்பத்தின்மீது மோதி நின்றது. காரிலிருந்த இருவரை, கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை புழங்கியதற்காகவும் வைத்திருந்ததற்காகவும் காவல்துறையினர் கைது செய்தனர். வாகனத்திலிருந்து கத்தி, கட்டுப்படுத்தப்பட்ட மருந்து எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்ததற்கு ஜூலை 27ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு தோ பாயோ புளோக் 177லிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தபோது ஒரு கார் வேகமாகப் புறப்பட்டு, தோ பாயோ லோரோங் 3, லோரோங் 4 சந்திப்பில் சறுக்கிச் சென்று ஓடியது. கடைசியில் தோ பாயோவில் உள்ள விளக்குக் கம்பத்தின்மீது மோதி கார் நின்றது.

காரை ஓட்டி வந்த 27 வயது நபர், காரிலிருந்து இறங்கி தப்பியோட முயற்சி செய்தார். அவரை அதிகாரிகள் தடுத்துப் பிடித்தனர். அவருடன் வந்த 25 வயது சந்தேக நபரையும் காவல்துறையினர் தடுத்து வைத்தனர். சுயநினைவுடன் இருந்த இருவரும் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து பற்றிய ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில், காவல்துறையின் கார்களில் ஒன்று கறுப்பு காருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது. மற்றொன்று அதே கறுப்பு காரின் பின்னால் நின்றுகொண்டிருந்தது. அதிகாரிகள் காரை நெருங்கியபோது, காரிலிருந்து ஒரு நபர் இறங்கி தப்பி ஓடுகிறார். இரண்டு அதிகாரிகள் அவரை துரத்துகின்றனர்.

காரை ஓட்டியவர் போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்ததாகவும் நம்பப்படுகிறது. உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காகவும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்