மேம்படுத்தப்பட இருக்கும் 53,000 வீவக வீடுகள்

மேம்படுத்தப்பட இருக்கும் 53,000 வீவக வீடுகள்

2 mins read
7c12af9d-065e-43ec-9968-2ba09ea73042
ஜூலை 28ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வில் இல்ல மேம்பாட்டுத் திட்டம் குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பேசினார். - படம்: தேசிய வளர்ச்சி அமைச்சு
multi-img1 of 2

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 53,000 வீடுகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த வீடுகள் 1997ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு கட்டப்பட்டவை.

கட்டமைப்பு சார்ந்த மேம்பாடுகளுடன் குளியலறைகள், வீட்டு வாசல் உட்பட அந்த வீடுகளின் வேறு சில அம்சங்களும் மேம்படுத்தப்படும்.

இதுகுறித்த தகவல்களை ஜூலை 28ஆம் தேதியன்று வீவக அறிவித்தது.

குளியலறைகளில் பிளவுகள் ஏற்பட்டு உரிந்து வரும் கான்கிரீட் உட்கூரை மற்றும் சுவர்களைப் பராமரிக்க புதிய அணுகுமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீவக தெரிவித்தது.

அதற்கான முன்னோட்டத் திட்டம் 2021ஆம் ஆண்டில் தொடங்கியது என்றும் அது வெற்றிகரமாக நடந்தேறியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேம்பாட்டுத் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீடுகள் சிங்கப்பூரெங்கும் உள்ள பல வட்டாரங்களில் உள்ளதாக வீவக கூறியது.

ஜூரோங் வெஸ்ட், ஹவ்காங், உட்லண்ட்ஸ், பாசிர் ரிஸ் ஆகிய வட்டாரங்கள் அவற்றில் அடங்கும்.

மேம்பாட்டுப் பணிகளுக்காக அரசாங்கம் $742 மில்லியன் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிளவுகள் ஏற்பட்டு உரிந்து வரும் கான்கிரீட், நீர் கசிவு காரணமாக உட்கூரையிலிருந்து வீட்டிற்குள் நீர் வடிதல் போன்ற பராமரிப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இல்ல மேம்பாட்டுத் திட்டம் 2007ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 410,000 வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

ஜூலை 28ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வில் இல்ல மேம்பாட்டுத் திட்டம் குறித்து அவர் பேசினார்.

மேம்படுத்தப்பட்ட வீடுகளில் ஏறத்தாழ 370,000 வீடுகளை (ஏறத்தாழ 90 விழுக்காடு) மேம்படுத்த மொத்தம் $4 பில்லியன் செலவானதாக வீவக கூறியது.

வீடுகள் கட்டப்பட்டு குறிப்பிட்ட ஆண்டுகள் ஆன பிறகே அவை இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அதன் பிறகு, அந்தக் குடியிருப்புக் கட்டடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் குறைந்தது 75 விழுக்காட்டினர், மேம்பாட்டுத் திட்டத்துக்கு இசைந்தால் மட்டுமே வீடுகள் மேம்படுத்தப்படும்.

இல்ல மேம்பாட்டுத் திட்டம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒன்று, அத்தியாவசிய மேம்பாடு.

மற்றொன்று, கட்டாயமற்ற மேம்பாடு.

சுவர்களில் உள்ள பிளவுகளைச் சரிசெய்தல் அத்தியாவசிய மேம்பாட்டின்கீழ் வருகிறது.

பழைய வீடுகள் தொடர்ந்து பாதுகாப்பான வசிப்பிடங்களாக இருக்க இவை அவசியம்.

சிங்கப்பூரர்கள் இதற்குச் செலவு செய்யத் தேவையில்லை.

மொத்த செலவையும் அரசாங்கம் ஏற்கிறது.

புதிய வாசல் கதவு, குளியலறை மற்றும் கழிவறைகளைப் புதுப்பிப்பது போன்றவை கட்டாயமற்ற மேம்பாடுகளாகும்.

இதற்கு, வீட்டின் வகையைப் பொறுத்து அரசாங்கம் 95 விழுக்காடு வரை மானியம் வழங்குகிறது.

“குடியிருப்புப் பேட்டைகளைத் துடிப்புடையதாக வைத்திருக்க அதைச் சார்ந்த இடங்களும் சுற்றியுள்ள இடங்களும் காலத்துக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும். எனவே, பழைய வீடுகளையும் குடியிருப்புப் பேட்டைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன்மூலம் சிங்கப்பூரர்களுக்கு தரமான வீடுகளும் சுற்றுப்புறமும் கிடைக்கும்,” என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

இவ்வாண்டு இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 700 வீவக குடியிருப்புக் கட்டடங்கள் பலனடையும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்