தொகுதி பாரபட்சமின்றி ஒவ்வொரு சிங்கப்பூரரின் வாழ்க்கையையும் முன்னேற்றுவதே அரசாங்கத்தின் கடப்பாடு: மூத்த அமைச்சர் லீ

தொகுதி பாரபட்சமின்றி ஒவ்வொரு சிங்கப்பூரரின் வாழ்க்கையையும் முன்னேற்றுவதே அரசாங்கத்தின் கடப்பாடு: மூத்த அமைச்சர் லீ

2 mins read
487670cd-1d14-45c4-9048-cfcb416ad63e
புவாங்காக் சமூக மன்றத் திறப்பு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட மூத்த அமைச்சர் லீ சியன் லூங் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் எந்தத் தொகுதியில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரின் வாழ்க்கையையும் முன்னேற்றுவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டு உள்ளது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.

புவாங்காக் சமூக மன்றத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் பங்கேற்று திரு லீ பேசினார். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற அந்நிகழ்வில் 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னர், ஆளும் மக்கள் செயல் கட்சி வசம் இருந்த பாரிஸ் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியின் ஓர் அங்கமாக புவாங்காக் இருந்தது.

திரு லீ தமது உரையில் அதனைக் குறிப்பிட்டுப் பேசினார்.

“புவாங்காக்கில் சமூக மன்றத்தைக் கட்டுவதற்கான திட்டங்கள் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது புவாங்காக் ஆளுங்கட்சியின் தொகுதியாக இருந்தது.

“கடந்த பொதுத் தேர்தலில் அது செங்காக் குழுத்தொகுதிக்கு கைமாறிவிட்டபோதிலும், சமூக மன்றத்திற்கான கட்டுமானப் பணிகளை நாம் தொடர்ந்தோம்.

“காரணம், சிங்கப்பூரர்கள் எந்தத் தொகுதியில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரின் வாழ்க்கையையும் முன்னேற்ற வேண்டும் என்னும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு உள்ளது.

“சிங்கப்பூர் மக்களுக்கு சிறந்த சேவை கிடைத்ததா என்பதையும் ஒவ்வொரு தொகுதியிலும் வசிப்போர் தங்களைச் சுற்றியுள்ள பரந்த சமூகத்துடன் தொடர்புடையவர்களாகவும் உறவினர்களாகவும் உணர்கிறார்களா என்பதையும் உறுதிசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம்,” என்றார் மூத்த அமைச்சர் லீ.

2020 பொதுத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத் தொகுதியில் புவாங்காக் உள்ளடங்கியது.

அந்தத் தேர்தலில், பாட்டாளிக் கட்சி 52.13 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று செங்காக் குழுத்தொகுதியைக் கைப்பற்றியது. ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு 47.87 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன.

புவாங்காக் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே 3.7 ஹெக்டர் நிலப்பரப்பில் புதிய சமூக மன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் கட்டுமானத்தை 2022ஆம் ஆண்டு முடிக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆயினும், கொவிட்-19 பெருந்தொற்று கட்டுமானத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சமூக மன்றத்தைக் கட்டி முடிக்கத் தாமதமானது.

குறிப்புச் சொற்கள்