சிங்கப்பூர் ஆயுதப் படையும் (எஸ்ஏஎஃப்) ஃபேர்பிரைஸ் குழுமமும் (எஃப்பிஜி) இணைந்து புதிய ஏற்பாடு ஒன்றை செய்து வருகிறது. அதன்படி சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் முகாம்களில் ஆளில்லா 24 மணி நேர ‘சியர்ஸ்’ கடைகள் அமைக்கப்படுகின்றன.
இதன் மூலம் தேசிய சேவையாளர்கள் தங்களுக்குத் தேவையான அன்றாட அத்தியாவசியப் பொருள்களை எந்நேரமும் வாங்க முடியும்.
இந்தப் புதிய ஏற்பாடு குறித்து ஆயுதப் படையும் ஃபேர்பிரைஸ் குழுமமும் திங்கட்கிழமை (ஜூலை 29) அன்று அறிவித்தன.
இவ்வாண்டு டிசம்பருக்குள் சிங்கப்பூரில் உள்ள ஆயுதப் படையின் மொத்த முகாம்களில் கால்வாசி இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தானியக்க ‘சியர்ஸ்’ கடைகளை அறிமுகப்படுத்த இரண்டும் திட்டமிட்டுள்ளன.
சிங்கப்பூரில் மொத்தம் 42 எஸ்ஏஎஃப் முகாம்கள் உள்ளன.
முதன்முதலாக ஆளில்லா ‘சியர்ஸ்’ கடை இவ்வாண்டு ஏப்ரலில் சாங்கியில் உள்ள எஸ்ஏஎஃப் படகு முனையத்தில் திறக்கப்பட்டது.
இதையடுத்து கிளமெண்டி முகாம், கிராஞ்சி முகாம்-3, லிம் சூ காங்கில் உள்ள சுங்கை கெடோங் முகாம் ஆகிய இடங்களில் மேலும் மூன்று கடைகள் திறக்கப்பட்டன.
ஆரோக்கியமான உணவு மற்றும் பானம் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப உணவு, பானங்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்படுவதாக எஃப்பிஜி தனது அறிக்கையில் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆளில்லா ‘சியர்ஸ்’ கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழைந்து தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியே வரலாம். கட்டணம் செலுத்த கைப்பேசியோ, பிற கட்டண அட்டைகளையோ எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உள்ளே நுழைவதற்கு முன்பு முகப்புச் சாவடியில் எஃப்பிஜி செயலியின் பே/இயர்ன் கியூஆர் குறியீடு அல்லது பற்று அல்லது கடன் அட்டையை வருட வேண்டும்.

