சிங்பாஸ் விவரங்களுக்கு 8,000 வெள்ளி முதல் 15,000 வெள்ளி வரை வழங்கப்படும் என்று முன்பின் அறியாத நபரிடமிருந்து டெலிகிராம் வழியாக வாய்ப்பு வந்தது. அவசரமாக பணம் தேவைப்பட்ட நிலையில் சிங்கப்பூரரான 29 வயது கோ ஹாய் ஷான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்பாஸ் விவரங்களை விற்றுவிட்டார். ஆனால் அவருக்குப் பணம் வரவில்லை.
இந்த நிலையில் அவரது சிங்பாஸ் விவரங்கள் மூலம் ஒரு நிறுவனமும் வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மில்லியன் வெள்ளி சட்டவிரோப் பணத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
ஜூலை 23ஆம் தேதி கோவுக்கு 11 மாதம், இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வாரயிறுதியில் தீர்ப்பின் விவரம் வெளியிடப்பட்டது. அதில், ‘பெருமளவு சட்டவிரோதப் பணம்’ பரிவர்த்தனை செய்யப்பட்டதை நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
திரு கோ தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் அங்கீகாரமற்ற வகையில் தனிநபர் விவரங்களை வெளியிட்டது அவற்றில் ஒன்று. ஏமாற்றுவதற்கு உதவியது மற்றொன்று.
‘கே’ என்று டெலிகிராம் வழியாக அறிமுகமான நபரிடம் கோ தனது சிங்பாஸ் விவரங்களை வழங்கினார். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி தனியொருவர் பெயரில் ஒரு நிறுவனமும் மூன்று வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டன.
‘கே’யின் உத்தரவுகளைப் பின்பற்றி நிறுவனத்துக்கான வங்கிக் கணக்கை கோ தனது பெயரில் தொடங்கினார்.
பின்னர் வங்கிக் கணக்கின் கட்டுப்பாட்டை‘கே’விடம் அவர் ஒப்படைத்தார். ஒரு சில நாள்களில் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலும் இதர இரண்டு வங்கிக் கணக்குகளிலும் பெருமளவு பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன.
தொடர்புடைய செய்திகள்
நீதிமன்றத்தில் பேசிய கோவின் வழக்கறிஞரான கிருஷ்ணா, நிதி நெருக்கடியால் தனது கட்சிக்காரர் முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டதாகத் தெரிவித்தார். நிறுவனத்தின் வங்கிக் கணக்கு வழியாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் அவருக்குத் தெரியாது என்றும் வழக்கறிஞர் கூறினார்.
சிங்பாஸ் விவரங்களை வெளியிட்டதற்காக கோவுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.