கிளப் ஸ்த்ரீட்டில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டிற்குள் ஜூலை 28ஆம் தேதி புகுந்து பணம், பொருள்கள் திருடியதாக ஆடவர் இருவர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரோகித் நிக்சந்த், 32, ரெத்னா அசோக் ரெத்னா சுந்தார், 31 என்ற அவ்விருவரும் குளிரூட்டி வைக்கப்பட்டுள்ள சுவரின் பக்க விளிம்பில் ஏறி வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடி, முகக்கவசம் ஆகியவற்றை அணிந்திருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
அவர்கள் வீடு புகுந்தது குறித்து ஜூலை 28 அதிகாலை சுமார் 4.40 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை விளக்கியது. வீடு புகுந்த அந்த இரு ஆடவர்களும் $50,000 ரொக்கப் பணம், $67,300 மதிப்புள்ள ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், ஐந்து ஆடம்பர கைப்பைகள், நகைகள் ஆகியவற்றை திருடியதாகக் காவல்துறை தெரிவித்தது.
கேமராக்கள், உள்கட்டமைப்பு தொலைக்காட்சிப் படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த ஆடவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்ட அன்றே அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் இரண்டு ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், ஐந்து ஆடம்பர கைப்பைகள், $41,400 ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
வீடு புகுந்து திருடியதாக நம்பப்படும் இருவரில் ஒருவரை தனது வீட்டில் தங்க வைத்திருந்ததாக 30 வயது ஆடவர் தற்பொழுது விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிய வருகிறது.
வீடு புகுந்து திருடிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இரு ஆடவர்களும் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.