வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) பழைய வீடுகளின் விற்பனை இவ்வாண்டின் முதல் பாதியில் சாதனை அளவை எட்டியது.
குறைந்தபட்சம் 40 ஆண்டு பழைமையான 3,042 வீடுகள் முதல் ஆறு மாதங்களில் விற்பனை ஆயின.
கடந்த ஆண்டின் முதல் பாதியில் விற்கப்பட்ட அத்தகைய வீடுகளின் எண்ணிக்கை 2,412.
அப்போது அது சாதனையாக இருந்தது.
இவ்வாண்டில் அதைக் காட்டிலும் அதிக வீடுகள் விற்பனை ஆகி புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
வீவக வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கும் குறைவான புதிய வீடுகளின் சராசரி விலை பழைய வீடுகளின் விலையைக் காட்டிலும் அதிகமாக நீடிக்கும் வேளையில், இரண்டு விலைகளுக்கும் இடையிலான வித்தியாசம் கடந்த ஆண்டு சுருங்கியது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் புதிய வீடுகளின் சராசரி மறுவிற்பனை விலை பழைய வீடுகளைக் காட்டிலும் 39.4 விழுக்காடு அதிகமாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஓராண்டுக்கு முன்னர், இரு விலைகளுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமாக, அதாவது 43.1 விழுக்காடாக இருந்தது.
ஒட்டுமொத்த மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளில், பழைய வீடுகளின் விற்பனை விகிதம் வளர்ச்சி கண்டு வருகிறது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் நடைபெற்ற 13,838 பரிவர்த்தனைகளில் 22 விழுக்காடு பழைய வீடுகள் தொடர்பானவை.
பழைய வீடுகளுக்குக் குறைவான குத்தகைக் காலம் இருப்பதை உள்ளூர்வாசிகள் அறிந்திருந்தும் விற்பனை விகிதம் அதிகமாக இருந்தது.
நடப்பில் உள்ள கொள்கைகள் தங்களுக்கு அதிக சாதகமாகவும் ஈர்ப்புத்தன்மையுடனும் இருப்பதால் பழைய வீடுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று ‘ஆரஞ்சுடீ’ என்னும் சொத்துச் சந்தை நிறுவனம் தெரிவித்து உள்ளது.
உதாரணத்திற்கு, பழைய வீட்டை வாங்கும்போது வீவக கடன்களைப் பெறுவதில் அதிக நீக்குப்போக்கு கிடைக்கிறது.
அத்துடன், இல்ல மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அந்த வீடுகளில் வாழும் சூழல் மேம்பட்டதாக உள்ளது என்றது அந்நிறுவனம்.

