சிங்கப்பூரில் உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் தங்களது வர்த்த நிலவரம் மேம்படும் என்று எதிர்பார்க்கின்றன.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் வர்த்தகம் வளரும் என்பது அந்நிறுவனங்களின் நம்பிக்கை.
பகுதிமின்கடத்திகளுக்கான தேவை அதிகரிப்பு, பயணம் மற்றும் பயனீட்டாளர் செலவின உயர்வு போன்றவற்றின் எதிரொலியாக நிறுவனங்களின் வர்த்தகங்கள் மேம்படலாம் என்று புதன்கிழமை (ஜூலை 31) வெளியிடப்பட்ட இரு ஆய்வுகள் தெரிவித்தன.
வரும் மாதங்களில் வர்த்தக நிலவரம் 23 விழுக்காடு அதிகரிக்கும் என உற்பத்தி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக பொருளியல் மேம்பாட்டுக் கழகம் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் அதிக உற்பத்தி இருக்கும் என்பது அதில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களின் கணிப்பு.
அதேபோல தங்களது வர்த்தகம் 13 விழுக்காடு உயரும் என்று சேவை நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை மேற்கொண்ட ஆய்வு தெரிவித்து உள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரை அந்த நிறுவனங்களின் வருவாய் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு முன்கூட்டி கணித்து உள்ளது.
உற்பத்தித் துறையில், உயிர்மருத்துவ உற்பத்திப் பிரிவு தவிர இதர பிரிவுகள் அனைத்தும் ஆண்டின் எஞ்சிய பகுதியில் நல்ல வர்த்தக வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் மின்னணு உற்பத்திப் பிரிவு உயர்ந்தோங்கக் கூடியதாகத் தோன்றுகிறது. அந்தப் பிரிவு மட்டும் அடுத்த ஆறு மாதங்களில் 40% வளரும் என்பது ஆய்வின் கணிப்பு.
இந்த வளர்ச்சி விகிதங்கள் நிகர சரிசம அளவு கொண்டவை என்கிறது ஆய்வு. அதாவது, வர்த்தகத்தின் எதிர்மறைப் போக்கிற்கும் ஏற்றம் தரும் போக்கிற்கும் இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் அது கணிக்கப்படுகிறது.

