மரினா பே உல்லாசப் படகு நிலையம் வழியாக சிங்கப்பூர் வரும் பயணிகள், வரும் டிசம்பர் மாதம் முதல் எளிமையான, சிரமமற்ற வகையில் குடிநுழைவு அனுமதியைப் பெறமுடியும்.
கடப்பிதழ் சோதனையின்றி குடிநுழைவு அனுமதி பெறுவதற்கான வசதியை படகு முனையங்களில் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஏற்படுத்தும்போது அவர்கள் அந்த வசதியைப் பெறலாம்.
கடப்பிதழ் சோதனை அவசியமில்லாத தானியக்கக் குடிநுழைவு வசதியை விரிவாக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது என்று ஆணையம் புதன்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.
கடல் வழியாகவும் ஆகாயம் வழியாகவும் வரும் உல்லாசப் படகுப் பயணிகள் தங்களது முக அடையாளத்தைக் காண்பித்து குடிநுழைவு அனுமதி பெறலாம். நிலச் சோதனைச்சாவடிகள் வழியாக வருவோர் கியூஆர் குறியீட்டை வருடி அந்த அனுமதியைப் பெறமுடியும்.
இதற்கிடையே, உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் அறிமுகம் செய்யப்பட்ட கியூஆர் குறியீட்டு குடிநுழைவு அனுமதி முறை, ஆகஸ்ட் மாதம் முதல் மோட்டார் சைக்கிள்களுக்கும் சரக்கு வாகனங்களில் செல்வோருக்கும் விரிவு செய்யப்படுகிறது.
பேருந்துப் பயணிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் அந்த வசதி கிடைக்கும்.
கார் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தற்போது கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்துவதாக ஆணையம் கூறியது. அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய சிங்கப்பூர்வாசிகள் மற்றும் நீண்டகால அனுமதியில் உள்ளோர் என்றும் அது தெரிவித்தது.
இந்த கியூஆர் குறியீட்டு அனுமதி முறை ஆகஸ்ட் முதல் சாங்கி விமான நிலையத்திலும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் வந்தடையும் சிங்கப்பூர்வாசிகள் கடப்பிதழ் சோதனையற்ற அனுமதியைப் பெறும் முறை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சாங்கி விமான நிலையம் 3வது முனையத்தில் சோதிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில நுழைவாயில்களில் அந்தச் சோதனை நடைபெறும்.
சோதனை முடிந்து அந்த நடைமுறை செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படலாம் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.
தானியக்க வசதியின் விரிவாக்கம் குறித்து ஆணையத்தின் செயலாக்கப் பிரிவின் துணை இயக்குநர் ஃபுவா சியூ ஹுவா விளக்கினார். குடிநுழைவு அனுமதி முறையை மேம்படுத்த ஆணையம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
“சோதனை முடிவுற்றதும் கடப்பிதழ் சோதனையற்ற இருவகை அனுமதியும் அமல்படுத்தப்படும். அதன் பிறகு குடிநுழைவு அனுமதியைப் பெறுவதற்கான நேரம் 30 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை குறையும்.
“பெரும் திரளான பயணிகளுக்கு கடப்பிதழ் சோதனையற்ற குடிநுழைவு அனுமதியை அறிமுகம் செய்யும் முதல் நாடு சிங்கப்பூர்,” என்றார் ஆணையத்தின் உதவி ஆணையாளருமான ஃபுவா.
இந்நிலையில், கடப்பிதழ் சோதனையற்ற புதிய தானியக்கச் செயல்பாட்டு முறை மரினா பே உல்லாசப் படகு நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 31) செய்தியாளர்களுக்குச் செய்து காண்பிக்கப்பட்டது.