தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பைட்டான்ஸ் நச்சுணவுச் சம்பவம்: 2 உணவு நிறுவனங்களுக்குத் தற்காலிகத் தடை

2 mins read
84f33b75-b955-4f8b-94fd-6d1382c2a032
நார்த் பாயிண்ட் டிரைவில் உள்ள யுன் ஹாய் யாவ் (இடம்), செனோக்கோ சவுத் ரோட்டில் உள்ள பு தியன் சர்விசஸ் இரண்டிற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - படங்கள்: ஹெஸ்டர் டான், கூகல் மேப்ஸ்

ஒன் ராஃபிள்ஸ் கீயில் அமைந்துள்ள பைட்டான்ஸ் அலுவலகத்தில் ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நச்சு உணவு சம்பவத்தின் தொடர்பில், உணவு தயாரித்து வழங்கும் இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதி முதல் காலவரையறையற்று அவற்றுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எண் 1, நார்த் பாயிண்ட் டிரைவில் உள்ள யுன் ஹாய் யாவ், எண் 2, செனோக்கோ சவுத் ரோட்டில் உள்ள பு தியன் சர்விசஸ் ஆகியவை அவ்விரண்டு நிறுவனங்கள் என்று சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

ஜூலை 30ஆம் தேதி இரு நிறுவனங்களும் தயாரித்து வழங்கிய உணவை உட்கொண்ட 130 பேருக்கு இரைப்பைக் குடல் அழற்சி அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த யுன் ஹாய் யாவ் நிறுவனம் சிங்கப்பூரில் பொதுவாக யுன் நான்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள இரு நிறுவனங்களும் அவற்றின் வளாகங்களில் துப்புரவு, கிருமிநீக்கப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கருவிகள், கலன்களையும் தூய்மைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே அங்குள்ள உண்பதற்குத் தயார்நிலையில் உள்ள உணவு, விரைவில் அழுகும் தன்மை கொண்ட உணவு அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டியது கட்டாயம்.

அந்த வளாகங்களில் உணவைக் கையாளும் ஊழியர்கள் அனைவரும் மீண்டும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சி 1ஐப் பயின்று, தேர்ச்சி பெறவேண்டும்.

மீண்டும் உணவைக் கையாளும் வேலையைத் தொடங்குமுன் அவர்கள் உணவு கெட்டுப்போனதால் ஏற்படும் நோய்க்கிருமித் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று உறுதிசெய்யப்படுவதும் அவசியம்.

நச்சுணவுச் சம்பவத்தை அடுத்து மொத்தம் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மற்றவர்கள், வெளிநோயாளி சிகிச்சை அல்லது தாங்களாகவே மருந்து உட்கொண்டனர் அல்லது குணமாகிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்