புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி நிலையத்தில் இரண்டு புதிய இலகு ரயில் வண்டிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) பயணிகள் சேவையைத் தொடங்கின.
மூன்றாம் தலைமுறை வடிவமைப்பைக் கொண்ட இவ்வகையான மேலும் இரு ரயில்கள் தற்போது சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள 15 புதிய இலகு ரயில்கள் 2025ன் இறுதிக்குள் சிங்கப்பூரை வந்தடையும்.
முழுமையான சீரமைக்கப்பட்ட புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி (பிபிஎல்ஆர்டி) வழித்தடங்களின் சேவைக்கென மொத்தம் 19 புதிய இலகு ரயில்கள் 2026க்குள் சேவையாற்றும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 1ல் தெரிவித்துள்ளது. புதிய இலகு ரயில்கள் படிப்படியாக கடந்த 20 ஆண்டுகளாக சேவையாற்றும் முதல் தலைமுறை வண்டிகளுக்கு மாற்றாக அமையும்.
வெள்ளோட்டத்தைத் தொடங்கிய இரண்டு புதிய இலகு ரயில்களில், துணைப் பிரதமர் கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து, சட்ட துணை அமைச்சரும் புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான முரளி பிள்ளை ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். அவர்கள், புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள டென் மைல் ஜங்ஷன் சந்திப்பு நிலையத்திலிருந்து சுவா சூ காங் எல்ஆர்டி நிலையம் வரையில் பயணம் செய்தனர்.
புதிய ரயில்களில் பற்பல அதிநவீனக் கருவிகள் உள்ளன. முழு வண்ணத்தில் எல்சிடி திரையில் ரயில் செல்லும் பாதையின் வரைபடங்கள் பயணிகள் எங்கு செல்கிறோம் என்பதை அறிந்துகொள்ள உதவும். வண்டி முழுவதும் குளிர்சாதன வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, ரயில்களைக் கண்காணிக்க நேரடி உணர்கருவிகள் ரயில்களுக்கு மின்சக்தி வழங்கும் தடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்துகொள்ள எஸ்எம்ஆர்டி அதிகாரிகளுக்கு அவை உதவும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டியின் சேவைத் திறம் மேம்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ கூறினார். இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் முடிந்த 12 மாதங்களில் 173,000 கிலோமீட்டர் பயணித்த வண்டிகள், இரண்டாம் காலாண்டில் 204,000 கி.மீ. தூரத்தைக் கடந்தன என்று குறிப்பிட்டார்.