இணையம் வழியாக பொருள்களை விற்கும் நிறுவனத்தை ஏமாற்றி 52,000 வெள்ளி மோசடி செய்ததாகக் கூறப்படும் 26 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் முன்பதிவு செய்யப்பட்ட கணினி பொருள்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது வாங்கிய பொருள்களை திருப்பி அனுப்புவதாகக் கூறியோ பல முறை பணத்தை அவர் திருப்பி கேட்டுள்ளார்.
உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தின் அதிகாரிகள், விசாரணைகளை மேற்கொண்டு, காவல்துறை கேமராக்களை ஆராய்ந்து ஏமாற்றிய ஆடவரின் அடையாளத்தை ஜூலை 31ஆம் தேதி கண்டுபிடித்தனர்.
அவரிடமிருந்து 13,000 வெள்ளி மதிப்புள்ள கணினி பாகங்கள் மீட்கப்பட்டன.
ஆகஸ்ட் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவர்மீது முறைப்படி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.