சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளும் இதர நிகழ்ச்சிகளும் அதிகரித்து வரும் அதேவேளை பொழுதுபோக்குத் துறைக்கு எதிரான புகார்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த ஆண்டின் முதல் பாதியில் அந்தத் துறைக்கு எதிராக 670 புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. 2023ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான புகார்களின் எண்ணிக்கை 105.
ஒப்புநோக்க, புகார்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்த விவரங்களை கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 1) தெரிவித்தது.
மொத்த புகார் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி ‘ஏஷியன் கெச்சர் அண்ட் பூட்டிக்’ என்னும் ஆடையலங்கார நிறுவனத்துக்கு எதிரானது. சிங்கப்பூர் ஆகாய விளக்கொளி திருவிழாவின் ஏற்பாட்டாளர் அந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தோசாவில் உள்ள பலவான் கிரீன் பச்சைப் புல்வெளிக்கு மேலே இரவு நேரத்தில் ஒளிவிளக்குகளை மிதக்கவிடும் நிகழ்ச்சிக்கு பிப்ரவரி 21ஆம் தேதி அந்த நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இருப்பினும், சிறிதளவு நெருப்புடன் ஒளிவிளக்குகளை மேலே அனுப்புவதற்குத் தேவைப்படும் அனுமதி மற்றும் உரிமத்தை அந்த நிறுவனம் பெறத் தவறியது.
அந்த நிகழ்ச்சியைக் காண ஒவ்வொருவரும் $50 செலுத்திப் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்த நூற்றுக்கணக்கானோர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் திரண்டபோது ஒளிவிளக்குகள் மிதக்கவிடப்படாததை அறிந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பட்டம் பறக்கவிடப்படுவது போல, தரையில் இருந்து 60 மீட்டர் நீளக் கயிற்றால் கட்டப்பட்டு உயரே அனுப்பப்படும் ஒளிவிளக்கு, 10 நிமிடங்கள் வரை வானில் மிதக்கும் என்று சொல்லப்பட்டதாக புகார்களில் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தை காவல்துறையும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கமும் விசாரித்தன. பணம் செலுத்தியோருக்கு அது திருப்பித் தரப்படும் என்று சங்கம் மார்ச் மாதம் கூறியது.
இதுவரை $20,450 திருப்பித் தரப்பட்டதாக வியாழக்கிழமை அது தெரிவித்தது.
பொழுதுபோக்குத் துறைக்கு எதிரான இதர புகார்கள் இசை நிகழ்ச்சிகளின் நுழைவுச்சீட்டுகளை விற்போர் தொடர்பானவை. நுழைவுச்சீட்டுகளை அவர்கள் அதிக விலைக்கு விற்றதாக புகார்கள் பெறப்பட்டதாக சங்கம் தெரிவித்தது.
இணைய விற்பனையாளர்களுக்கு எதிரான புகார்களும் 53 விழுக்காடு அதிகரித்தன. இசை நிகழ்ச்சிகளுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் இணையம் வழியாக வாங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் தொடர்பான புகார்கள் அவை என்று சங்கம் குறிப்பிட்டு உள்ளது.

