காலை சிற்றுண்டியாக முட்டை, ‘காயா’ ரொட்டி துண்டுகளை $1க்கு என்டியுசி யூனியன் உறுப்பினர்கள் 60க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பி தியாம் உணவு நிலையங்களில் ஆகஸ்ட் 31 வரை பெறலாம்.
ஜெம், ஜுரோங் பாயின்ட், பிளாசா சிங்கப்பூரா, அங் மோ கியோ ஹப், பாயா லேபார் குவார்டர், விவோசிட்டி ஆகிய கடைத்தொகுதிகளில் இயங்கும் கோப்பித்தியாம் உணவு நிலையங்களும் அவற்றில் அடங்கும்.
தனித்துவமான ஒரு வெள்ளி காலைச் சிற்றுண்டியை கோப்பி தியாம் உணவு நிலைய நிர்வாகத்துடன் இணைந்து ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் சிங்கப்பூரின் 59வது தேசிய தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. இதனை ஆகஸ்ட் 1 வெளியிடப்பட்ட ஊடகச் செய்தியில் ஃபேர்பிரைஸ் குழுமம் (எஃப்பிஜி) தெரிவித்தது.
குறிப்பிடப்பட்ட நாள்களில் தினசரி காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை, தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் தொழிற்சங்க (என்டியுசி யூனியன்) உறுப்பினர்கள் அவர்களின் உறுப்பினர் அடையாள அட்டை அல்லது மின்னிலக்க ‘சில்வர்’ அட்டைகளைக் காட்டி இச்சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஃபேர்பிரைஸ் குழுமத்தின் செயலியைக் கொண்டு (FPG app.) அவர்கள் கட்டணம் செலுத்தி, மின் பற்றுச்சீட்டுகளுக்கு (e-voucher) விண்ணப்பிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற முறையில் குறிப்பிட்ட மைலோ (400 கிராம்) டப்பாக்களை ஆகஸ்ட் 1 முதல் 4 வரை அனைத்து ஃபேர் பிரைஸ் கடைகளிலும் பெறலாம்.ஒரு டப்பாவின் விலை $6.75 எனவும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு மட்டுமே ஒரு விற்பனையில் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பி தியாம் நிர்வகிக்கும் லாவ் பா சாட் உணவு மையத்தில் சிக்கன் கெசடிலா, முட்டை மசாலா பிரியாணி, கிரிமி மிசோ ரெமன் போன்ற வகைகளில் ஒன்றை, $5.90க்கு உண்டு மகிழலாம். வெயிலைத் தணிக்க இதமான ஹொக்கைடோ ஐஸ் பாலை 59 காசுக்குச் சில்லென குடிக்கலாம்.
தேசிய தின கொண்டாட்டத்தை குடியிருப்பு வட்டாரங்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில், இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஃபேர்பிரைஸ் குழுமம் உட்லண்ட்ஸ், பூன் தியோங் ரோடு வீடமைப்புகளில் ஆகஸ்ட் 3 அன்று ஏற்பாடு செய்துள்ளது.

