இருக்கைவார் விளக்கு எரியும்போது உணவு வழங்கும் சேவை மீண்டும் அமல்

2 mins read
மே மாத SQ321 சம்பவத்துக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான விதி தளர்த்தப்படுகிறது
382aa6dc-da3e-481c-b759-ee83d0545012
காற்றுக் கொந்தளிப்பால் வானில் கடுமையாக ஆட்டங்கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மே மாதம் SQ321 விமானம் நடுவானில் ஆட்டங்கண்ட சம்பவத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளை நீக்குகிறது. அது இருக்கை வார் அடையாள விளக்கு எரியும் நேரத்தில் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடர தீர்மானித்துள்ளது. 

மே 21ஆம் தேதியன்று விமானச் சேவை SQ321 பறந்துகொண்டிருந்தபோது நடுவானில் திடீரென கடுமையாக ஆட்டங்கண்ட பாதிப்பில் ஒருவர் மரணம் அடைந்தார், பன்னிரெண்டு பேர் காயம் அடைந்தனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இருக்கை வார் போடவேண்டும் என்று அறிவுறுத்தும் விளக்கு எரியும்போது உணவுச் சேவைகள் வழங்குவதை நிறுத்தியது. அந்த விதிமுறைகளை ஆகஸ்ட் 1 முதல் தளர்த்துவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

ஆனாலும், விளக்கு எரியும்போது சூப் உள்ளிட்ட சூடான பானங்கள் தொடர்ந்து வழங்கப்படாது. இருக்கை வார் அடையாள விளக்கு எரியும்போது,​​​​விமானிகள் விமானப் பணியாளர்களைத் தங்கள் இருக்கைகளுக்குச் சென்று அமரச் சொல்லலாம். தேவைப்பட்டால், சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிடலாம். வானிலை செயல்பாட்டைப் பொறுத்து, விமானத்தில் உள்ள சேவையை இடையில் நிறுத்தலாமா அல்லது தொடரலாமா என்பதை அதன் விமானிகள் தொடர்ந்து முடிவு செய்வார்கள்.

கடந்த நான்கு வாரங்களாக, விமானிகளும், விமானப் பணியாளர்களும் கூடுதல் புதுப்பிப்புப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர், இந்தப் பயிற்சியில் காற்றுக் கொந்தளிப்புடன் தொடர்புடைய ஆபத்துகளை எவ்வாறு கண்டறிந்து கையாள்வது, இதுபோன்ற நிகழ்வுகளின்போது பயணிகளுக்கு எவ்வாறு உதவுவது போன்றவற்றை அறிந்துகொண்டனர்.

இப்போது விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்புத் திரைகள் வழியாகப் அடிக்கடி பயணிகளுக்கு இருக்கை வார் அணிவதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்படுகின்றது.

SQ321 சம்பவத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட கடுமையான நடைமுறைகள் நிறுவனத்தின் சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெயர் தெரியாத நிலையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் பேசிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணியாளர்கள், இருக்கை வார் அடையாள விளக்கு எரியும்போது அனைத்துச் சேவைகளையும் இடையில் நிறுத்துவது என்பது நேர அழுத்தத்தின் கீழ் வேலை செய்வதாகும் என்று தெரிவித்தனர். விமானம் மேலெழுந்த பிறகு வழங்கும் சேவையைக் குறித்து வாடிக்கையாளர்கள் மோசமான புகார் தெரிவித்ததாக விமானப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதைப்பற்றிக் கேட்டதற்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து வரும் பொதுவான கருத்து, பாதுகாப்பு நேரத்தின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்கள் புரிந்துகொண்டதைக் குறிப்பதாகக் கூறியது.

நடப்பு விசாரணைகளை மேற்கோள்காட்டி, அதன் விமானத்தில் உள்ள நடைமுறைகள் மேலும் எவ்வாறு மாறக்கூடும் என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க அது மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்