வீவக இனக் கொள்கை குறித்தப் பொய்த் தகவல்: சொத்து முகவருக்கு ‘பொஃப்மா’ உத்தரவு

வீவக இனக் கொள்கை குறித்தப் பொய்த் தகவல்: சொத்து முகவருக்கு ‘பொஃப்மா’ உத்தரவு

2 mins read
ab685f74-955f-4caa-85d3-371fdfeb0fab
ஸ்கைஒவேசிஸ் @ டோசன் கட்டடத்தில் உள்ள வீடு ஒன்று 1.73 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது குறித்து ஷாய்க் அமர் பதிவேற்றம் செய்த காணொளியின் தொடர்பில் பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) இனக் கொள்கைத் திட்டத்தைப் (இஐபி) பற்றிய தவறான கருத்துகளைக் கொண்ட காணொளி தொடர்பில் சொத்து முகவர் ஒருவருக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த எட்டு நிமிடக் காணொளியின் தொடர்பில் திரு ‌ஷாய்க் அமர் எனும் சொத்து முகவருக்கு இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அவ்வாறு செய்யுமாறு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 1) பொஃப்மா அலுவலகத்துக்கு உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட காணொளியை திரு ‌ஷாய்க் அமர் ஜூலை மாதம் 24, 25ஆம் தேதிகளில் தனது டிக்டாக், இன்ஸ்டகிராம், யூடியூப் கணக்குகளில் பதிவேற்றம் செய்தார். அந்தக் காணொளி பல்வேறு அம்சங்களில் தவறான கண்ணோட்டத்தைத் தரக்கூடிய கருத்துகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பாக இரண்டு பொய்த் தகவல்களைக் கருத்தில்கொண்டு பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது.

முதலில், சம்பந்தப்பட்ட காணொளியில், இஐபி திட்டம் சிறுபான்மை இனக் குடும்பங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை என்றும் வீடுகளை விற்கும்போது அத்தகைய குடும்பங்கள் பெரிய அளவிலான நிதிச் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இரண்டாவதாக, 1960களில் தொடங்கப்பட்டதிலிருந்து இஐபி திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்ற கருத்து இடம்பெற்றது.

அவற்றுக்குப் பதிலளித்த தேசிய வளர்ச்சி அமைச்சு, இஐபி சிறுபான்மை இனத்தவருக்குப் பல வழிகளில் பலனளிப்பதாகக் கூறியது. தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள் (பிடிஓ), எஞ்சியிருக்கும் வீடுகளின் விற்பனை (எஸ்பிஎஃப்) திட்டங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் எல்லா வீவக குடியிருப்புப் பகுதிகளிலும் சிறுபான்மையினருக்காக குறிப்பிட்ட விகிதத்தில் வீடுகள் ஒதுக்கப்படுவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

“இஐபி இல்லாவிட்டால் பிரபலமான வட்டாரங்களில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் அபாயம் ஏற்படும். வீவக நேரடி விற்பனைக்கும் இது பொருந்தும்,” என்று அமைச்சு சொன்னது.

அடுத்தபடியாக, இஐபி திட்டம் 1989ஆம் ஆண்டில் அறிமுகமானது, 1960களில் இல்லை என்பதை அமைச்சு குறிப்பிட்டது. சில வீவக குடியிருப்புப் பகுதிகளில் குறிப்பிட்ட இன சமூகங்கள் உருவாகும் போக்கு எழுந்தது என்றும் அதைக் கையாளவே இஐபி வரையப்பட்டது என்றும் அமைச்சு சுட்டியது. உதாரணமாக, சில பகுதிகளில் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர், வேறு சிலவற்றில் 10ல் ஒன்பது, சீனக் குடும்பங்களாக இருந்தன என்று அது தெரிவித்தது.

அதனால் வேறு வீட்டை வாங்குவோர் தற்போது இருக்கும் வீட்டை விற்கக் கூடுதல் கால அவகாசம் வழங்குவது, தேவைப்படுவோருக்கு இஐபி கட்டுப்பாடுகளை விலக்குவது போன்ற நடவடிக்கைகளை வீவக எடுத்துள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்