சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 5,480 பேர் மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் பிடிபட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் தெரிவித்துள்ளன.
இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேலானது. கடந்த 2023ஆம் ஆண்டில் 7,838 குற்றவாளிகள் பிடிபட்டனர். இது, 2022ல் 4,916ஆக இருந்தது.
மின்சிகரெட்டுகளை வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ஆணையம், அமைச்சு ஆகியவற்றின் கூட்டறிக்கை தெரிவித்தது.
மின்சிகரெட் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
சமூக ஊடகத் தளங்களிலிருந்து மின்சிகரெட், அதுசார்ந்த கருவிகள் விற்பனை தொடர்பான அறிவிப்புகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் சுகாதார அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை கல்வி அமைச்சு, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம் மற்றும் பள்ளிகள், உயர்கல்வி நிலையங்கள், பொது இடங்கள், இணையத் தளம் என பலமுனைகளில் விற்பனையைத் தடுக்க இணைந்து செயல்பட்டு வருகின்றன.
2024ஆம் ஆண்டில் மட்டும், முதல் காலாண்டில் இருந்து இரண்டாவது காலாண்டில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இரண்டாவது காலாண்டில் பிடிபட்ட 690 மாணவர்கள் பற்றிய விவரங்கள் பள்ளிகளால் சுகாதார அறிவியல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 19 பேர், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள், சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையம், சிங்கப்பூர் மரினா பே சொகுசுக் கப்பல் முனையம், தானா மேரா படகு முனையம் ஆகிய இடங்களில் பிடிபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் மின் வர்த்தகம், சமூக ஊடகங்களின் ஒத்துழைப்புடன் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை சுகாதார அறிவியல் ஆணையம் 2,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட் மற்றும் அதன் உபகரணங்களின் விற்பனையை நீக்கியிருக்கிறது.
சிங்கப்பூரில் மின்சிகரெட் தொடர்பான விளம்பரங்கள், விற்பனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.