காலதாமதம்; நான்காவது முட்டைப் பண்ணை சாத்தியமா என மதிப்பீடு

2 mins read
4ea41575-138b-4848-90d0-d0ca25364451
ஐஎஸ்இ ஃபுட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு உயரும் செலவினத்தால் கட்டுமானப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. - படம்: எஸ்பிஎச்

சிங்கப்பூரில் நான்காவது முட்டைப் பண்ணையை தொடங்கி அது இவ்வாண்டு செயல்படத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது சாத்தியப்படுமா என்று தற்பொழுது மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த முட்டைப் பண்ணை ஐஎஸ்இ ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. உயரும் செலவினத்தால் கட்டுமானப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிந்தது. அத்துடன், உயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் நிறுவனம் சிரமங்களை எதிர்நோக்கியதாக கூறப்படுகிறது.

அந்த $100 மில்லியன் பெறுமானமுள்ள முட்டைப் பண்ணை ஆண்டு ஒன்றுக்கு 360 மில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவற்றுடன் ஏற்கெனவே உள்ள மூன்று முட்டைப் பண்ணைகளையும் சேர்த்து ஆண்டு ஒன்றுக்கு சிங்கப்பூருக்கு தேவைப்படும் முட்டையில் பாதி அளவை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள மூன்று முட்டைப் பண்ணைகள் சென்ற 2023ஆம் ஆண்டுக் கணக்குப்படி, சிங்கப்பூரர்களின் தேவையில் 31.9 விழுக்காட்டை பூர்த்தி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நான்காவது முட்டைப் பண்ணை, ஐஎஸ்இ நிறுவனத்தில் 80 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் எலிப்சிஸ்’ (Ellipsiz) என்ற நிறுவனத்தைச் சார்ந்தது. இது குறித்துக் கூறும் எலிப்சிஸ் நிறுவனம், அந்த முட்டைப் பண்ணை செயல்படக்கூடிய காலநேரத்தில் மாற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோய் தாக்கம், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், பணவீக்கம், பண்ணையின் உயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றால் தொடக்கத்தில் போட்ட செலவின மதிப்பீடு கணிசமாக உயர்ந்துள்ளதாக எலிப்சிஸ் நிறுவனம் விளக்கியது.

இதனால் முட்டைப் பண்ணை திட்டத்தை செயல்படுத்துவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளது என்றும் அது முட்டைப் பண்ணையைச் செயல்படுத்துவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எலிப்சிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்