தொடர் குற்றங்கள்: முன்னாள் வழக்கறிஞர் ரவிக்குச் சிறை, அபராதம்

2 mins read
3ae2fdc7-04c8-4d74-8ceb-291c6a8494ea
ஜூலை 17ஆம் தேதி அரசு நீதிமன்றங்களில் முன்னிலையான முன்னாள் வழக்கறிஞர் ரவி மாடசாமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழக்கறிஞர் தொழில் புரிய தடை விதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ரவி மாடசாமிக்கு, அவர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக 14 வாரச் சிறைத்தண்டனை, $5,500 அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் இந்தக் குற்றங்களை 2021ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

பெண் விற்பனையாளரை வார்த்தைகளால் அவமானப்படுத்தியது, தமக்கு வணக்கம் சொல்ல வந்தவரை அறைந்தது, குடிக்கத் தண்ணீர் வேண்டுமா என்று கேட்ட உணவக ஊழியரை தள்ளிவிட்டது ஆகியவை அந்தக் குற்றங்களில் அடங்கும்.

முன்னாள் வழக்கறிஞரான திரு ரவி, சவுத் பிரிட்ஜ் ரோடு கோவில் அர்ச்சகரை தள்ளிவிட்டது, பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியது போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டார்.

ஐம்பத்தைந்து வயது நிரம்பிய திரு ரவி, வேண்டுமென்றே காயம் விளைவித்த ஆறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அத்துடன், தொல்லை கொடுத்தது, பலவந்தமாக நடந்துகொண்டது, பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் நடந்துகொண்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளையும் திரு ரவி ஒப்புக்கொண்டார்.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திரு ரவி தான் தொழில் புரிந்த சட்ட நிறுவனத்தில், கண்ணாடி வாசனைத் திரவிய போத்தல் ஒன்றை சட்ட துணை ஊழியர் மீது வீசி எறிந்தார். அத்துடன், தனது வழக்கிற்கு தேவையான ஆவணங்களை அச்சுப் பிரதி எடுக்கவில்லை என்று கூறி சட்ட நிறுவன ஊழியர் ஒருவரின் கழுத்தை நெரித்தார்.

அந்த சட்ட துணை ஊழியர் மற்றோர் சக ஊழியரை அச்சுப் பிரதி எடுக்கச் சொல்லியிருந்ததாக ரவியிடம் தெரிவிக்க, அந்த மற்றொரு ஊழியர் மீது ரவி ‘ரிமோட் கண்ட்ரோல்’ சாதனம் ஒன்றை வீசி எறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரு ரவி துணிக் கடை ஒன்றில் இருந்தார். அப்பொழுது அவர் பேசியது கேட்கவில்லை என்று கூறிய பெண் விற்பனையாளரை அவமதித்து அவரை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் திரு ரவி.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் உள்ள ஒரு புத்தகக் கடையில் ரவிக்குத் தெரிந்த ஒருவர் ரவிக்கு வணக்கம் தெரிவித்தார். அதில் கோபமடைந்த திரு ரவி அந்த நபரை அறைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்